

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் அரசுமுறை பயணமாக அந்நாட்டின் 12 துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் குழுவினருடன் நேற்றிரவு டெல்லி வந்தார்.
இன்று காலை டெல்லி ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஏஞ்சலா மெர்கெலுக்கு முப்படையினரின் அணிவகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், ராஜ்கட் பகுதிக்கு சென்ற ஏஞ்சலா மெர்கெல் அங்குள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்த சந்திப்பின்போது செயற்கை நுண்ணறிவு, நகர்ப்புற வளர்ச்சி, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் இந்தியாவும் ஜெர்மனியும் இணைந்து செயலாற்றுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இதன் பின்னர் பிரதமர் மோடியும் ஏஞ்சலா மெர்கலும் செய்தியாளர்களிடையே உரையாற்றினர்.
’இன்றைய சந்திப்பின்போது பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்கொள்ள இருதரப்பு மற்றும் பலதரப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக நாங்கள் உறுதி ஏற்றுள்ளோம்.
ஜெர்மனியில் உள்ள பொருளாதார ஆற்றல் அமைப்புகளின் முன்னோடி தொழில்நுட்பத்தின் உதவியுடன் வரும் 2022-ம் ஆண்டுக்குள் ‘புதிய இந்தியாவை’ கட்டமைக்கவும் உறுதி ஏற்றுள்ளோம்’ என தனது உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.