

ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி காமராஜர் தெருவை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் அபிஷேக் (வயது 15). இவர் கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி வீட்டிலிருந்தே மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வருகின்றனர்.
இந்தநிலையில் அபிஷேக் சரிவர ஆன்லைன் வகுப்பில் பங்கேற்காமல் இருந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அபிஷேக் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டு படுத்துக்கொண்டார். இதற்கிடையே நேற்று அதிகாலை அவருக்கு வலிப்பு ஏற்பட்டு, உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அபிஷேக்கை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனின் உடலை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவர் தற்கொலை குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.