மராட்டியம், லட்சத்தீவில் கரை ஒதுங்கிய 1074 மீனவர்கள் உணவின்றி தவிப்பு

மராட்டியம், லட்சத்தீவில் கரை ஒதுங்கிய 1074 மீனவர்கள் ஊர் திரும்ப வழியின்றி தவிப்பதாகவும், உணவு, குடிநீருக்கு கூட வழியில்லை என்றும் வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி உள்ளனர்.
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தை கடந்த 30-ந்தேதி ஒக்கி புயல் புரட்டி போட்டது. 2 மணி நேரத்தில் மாவட்டம் போர்க்களம்போல் மாறிப் போனது. மரங்கள், மின்கம்பங்கள் முறிந்தன. வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. மாவட்டம் இருளில் மூழ்கியதால் மக்கள் தவித்தனர். கடந்த ஒரு வாரமாக உணவு, குடிநீர், மின்சாரம் இல்லாமல் மக்கள் தத்தளிக்கிறார்கள்.

புயல் அடித்தபோது கடலுக்கு சென்ற குமரி மீனவர்களின் படகுகள் அலையில் இழுத்துச் செல்லப்பட்டது. சுமார் 300-க்கும் மேற்பட்ட படகுகள் மாயமானது. அதில் இருந்த மீனவர்களும் காணாமல் போனார்கள்.

புயல் ஓய்ந்து கடல் அமைதி அடைந்தபோது மாயமான மீனவர்களை தேடும் பணி தொடங்கியது. இந்திய கடற்படை, கடலோர காவல் படை வீரர்கள் மீட்பு படகு, ஹெலிகாப்டர், ராணுவ விமானங்கள் மூலம்தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்கப்பட்டனர். கடலில் மிதந்த சிலரின் பிணங்களும் கண்டெடுக்கப்பட்டது. சில மீனவர்களின் உடல்கள் கேரள கடலோர பகுதிகளில் கரை ஒதுங்கியது.

இதையடுத்து குமரி மாவட்டத்தில் மாயமான மீனவர்கள், அவர்களின் படகுகள் பற்றிய விவரங்களை அரசு வெளியிட்டது. இதில் 70 மீனவர்கள் மட்டுமே மாயமாகி இருப்பதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது.

இந்த புள்ளி விவரத்தை மீனவ அமைப்புகள் மறுத்தன. குமரி மாவட்டத்தில் இருந்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும், அவர்களின் 254 படகுகளும் மாயமாகி இருப்பதாக தெரிவித்தனர்.

அரசு புள்ளி விவரமும், மீனவர்களின் தகவலும், முன்னுக்குப் பின் முரணாக இருந்தது. இதனால் மாயமான மீனவர்கள் எத்தனை பேர் என்பதை துல்லியமாக கணக்கெடுக்க அரசு புதிய ஏற்பாடுகளை மேற்கொண்டது.

அதன்படி, குமரி மாவட்டத்தில் உள்ள 44 மீனவ கிராமங்களிலும் மாயமான மீனவர்கள் குறித்த கணக்கெடுப்பு தொடங்கியது. இதில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஈடுபட்டனர். அவர்கள் இதுவரை 33 மீனவ கிராமங்களில் கணக்கெடுப்பை நடத்தி உள்ளனர். இன்னும் 11 கிராமங்களில் கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

44 கிராமங்களிலும் தகவல் சேகரிப்பு முடிந்த பின்பு மாயமான மீனவர்கள், அதில் மீட்கப்பட்டவர்கள் பற்றிய முழு விவரங்கள் தெரிய வரும்.

இதற்கிடையே குமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள் படகுகளுடன் மராட்டியம், கோவா, கர்நாடகா, குஜராத் மாநில கடற்கரைகளில் கரை ஒதுங்கி வருகிறார்கள்.

அலைகளால் துரத்தப்பட்டு காற்றின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இவர்களில் பலர் லட்சத்தீவின் ஆளில்லா தீவுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். கடலுக்குள் ஒரு வாரமாக தத்தளித்ததால் இவர்களின் தகவல் தொடர்பு சாதனங்கள் செயலிழந்து போனது.

கரை ஒதுங்கிய பின்னரே அந்தந்த மாநில மீனவ அமைப்புகள் மூலம் குமரி மாவட்ட மீனவ அமைப்புகளை தொடர்பு கொண்டு கரை ஒதுங்கிய விவரங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இப்படி வெளி மாநிலங்களில் இதுவரை 126 படகுகளும், அதில் இருந்த 1074 மீனவர்களும் தஞ்சம் அடைந்த தகவல் இப்போது தெரிய வந்துள்ளது. இவர்களில் மராட்டிய மாநிலம் ரத்தினகிரி துறைமுகத்தில் தஞ்சம் புகுந்தவர்கள் குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ அமைப்புகளுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் கரை திரும்பிய தகவலை தெரிவித்துள்ளனர்.

உயிர் பிழைத்தாலும், இப்போது ஊர் திரும்ப வழியின்றி தவிப்பதாகவும், உணவு, குடிநீருக்கு கூட வழியில்லை என்றும் வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி உள்ளனர்.

இதில் குளச்சலை சேர்ந்த டென்சன்பாபு என்ற மீனவர் கூறியதாவது:-

குமரியில் இருந்து கடலுக்கு சென்ற நாங்கள் புயலில் சிக்கி இப்போது மராட்டிய மாநிலம் வேங்காட் துறைமுகத்தில் கரை ஒதுங்கி உள்ளோம். அங்கு படகை விட்டு இறங்கவில்லை. எங்களிடம் உணவோ, குடிநீரோ இல்லை. ஊர் திரும்பவும் படகில் போதுமான டீசல் இல்லை. எங்களை எப்படியாவது மீட்டு ஊருக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை தமிழக அரசு மீட்டு வர வேண்டுமென்று குமரி மாவட்ட மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச் செயலாளர் பாதிரியார் சர்ச்சில் கூறியதாவது:-

மராட்டியம் மற்றும் பல்வேறு வெளிமாநிலங்களில் கரை ஒதுங்கிய குமரி மீனவர்களை மாநில அரசு மீட்டு வர வேண்டும். அதுவரை அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வசதிகளை மாநில அரசு செய்து கொடுக்க வேண்டும்.

இது தொடர்பாக நாளை கன்னியாகுமரி வரும் தமிழக கவர்னரிடம் மனு கொடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com