

மேற்கு வங்காளத்தில் கூர்கா இனத்தவர்கள் அதிகம் வசிக்கும் டார்ஜிலிங் பகுதியை தனி மாநிலமாக அறிவிக்ககோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர்.
போராட்டக்குழு தலைவர் பிமல்குருங் தலைமையில் 100 நாட்களையும் தாண்டி பந்த், முற்றுகை, ஆர்ப்பாட்டம் என பல போராட்டங்கள் டார்ஜிலிங்கில் நடந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
மேற்கு வங்க அரசு கூர்கா இனத்தவர்கள் வசிக்கும் டார்ஜிலிங் பகுதி யிலும் வங்காள மொழி அடிப்படையில் ஆட்சி நடத்துகிறது. எனவே தங்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என்று வற்புறுத்தி வந்தனர்.
கூர்கா லேண்ட் போராட்ட குழு தலைவர் பிமல் குருங், மேற்கு வங்க அரசுடன் பேச மறுத்துவிட்டார். இதையடுத்து மத்திய அரசு அவரை பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. நேற்று டெல்லியில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை பிமல் குருங்மற்றும் போராட்டக் குழு நிர்வாகிகள் சந்தித்து பேசினார்கள். உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபாவும் கலந்து கொண்டார்.
அப்போது கூர்கா லேண்ட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கு வங்க போலீசார் எடுத்த நடவடிக்கைகள், வழக்குகள் போன்றவற்றை கைவிடுவது, கூர்கா மக்களின் அடிப்படை உரிமைகள் போன்றவை பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டத்தை கைவிடுவதாக போராட்ட குழு தலைவர் பிமல்குருங் அறிவித்தார். 104 நாட்கள் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்ததாக இன்று காலையில் டார்ஜிலிங்கில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.