

சென்னை:
சென்னை தியாகராய நகர் மேற்கு மாம்பலத்தில் ‘ரூபி’ பேங்கர்ஸ் என்ற பெயரில் நகை கடையை ரஹ்மான், அவரது மகன்கள் அனீஸ், சையது ஆகியோர் நடத்தி வந்தனர். 15 ஆண்டுகளுக்கு மேல் இந்த நகைக்கடை செயல்பட்டு வந்தது.
தங்க நகைகளை அடகு வைப்போருக்கு வட்டியில்லா கடன் வழங்கி வந்தனர். முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வட்டியில்லாமல் தங்க நகை கடன் வழங்குவதாக வீடுகள் தோறும் நோட்டீஸ் விநியோகம் செய்தனர்.
இதை நம்பி திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மண்ணடி, புதுப்பேட்டை, பெங்களூர், ஆந்திரா, கேரளா மாநிலங்களில் வசித்துவரும் முஸ்லிம்கள் 1000 கிலோ வரை தங்க நகைகளை அடகு வைத்தனர்.
இந்த நகைகளை ரஹ்மான் மற்றும் அவரது மகன்கள் அனீஸ், சையது ஆகியோர் தனியார் நிதி நிறுவனங்களில் பலகோடி ரூபாய்க்கு அடகு வைத்துள்ளனர். அந்த பணத்தில் நிலம் மற்றும் வீடுகள் வாங்கி விற்கும் தொழில்செய்து வந்தனர்.
இந்தநிலையில் கடன் வாங்கியவர்களிடம் தொகையை திரும்ப வசூலித்தும் அவர்களின் நகைகளை ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
மே-2ந்தேதி நகையை திரும்ப ஒப்படைப்பதாக கடை உரிமையாளர்கள் உறுதி அளித்தனர். ஆனால் கடையை மூடிவிட்டு இரவோடு இரவாக தலைமறைவாகி விட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திரண்டு புகார் அளித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் குவிந்ததால் பொருளாதார குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுவரை ரூ.300 கோடிக்கு மோசடி நடைபெற்றுள்ளது. 1000 கிலோ அடமான தங்கத்தை அதன் உரிமையாளர்கள் சுருட்டி உள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஒருவர் கூறியதாவது:-
மேற்கு மாம்பலத்தில் ரூபி நகைக்கடையில் அடமானம் செய்தால் வட்டியில்லாமல் கடன் வழங்கப்படும் என்ற அறிவிப்பை நம்பி எங்களது நகையை இழந்துள்ளோம். சுமார் 1000 பேர் மோசடியில் ஏமாந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நகைகளை மீட்டுத்தர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் உரிமையாளர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.