தெற்கு காஷ்மீரில் தீவிரமாக செயல்படும் 100 பயங்கரவாதிகள் - ஒடுக்க ராணுவ நடவடிக்கை மும்முரம்

தெற்கு காஷ்மீரில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்க ராணுவ நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.
தெற்கு காஷ்மீரில் தீவிரமாக செயல்படும் 100 பயங்கரவாதிகள் - ஒடுக்க ராணுவ நடவடிக்கை மும்முரம்
Published on

தெற்கு காஷ்மீரில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்க ராணுவ நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

தெற்கு காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அத்துடன், கல்லூரி மாணவர்களும் பாதுகாப்பு படையினரின் ஆயுதங்களை பறித்தல், கல் வீசுதல் போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, பேகிபாக் என்ற இடத்தில் உள்ள தனது வீட்டுக்கு விடுமுறையில் வந்திருந்த ராணுவ வீரர் உமர் பயாஸ் என்பவரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்று படுகொலை செய்தனர்.

தெற்கு காஷ்மீருக்கான பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுள்ள ராணுவ தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் பி.எஸ்.ராஜூ நேற்று உமர் பயாஸ் வீட்டுக்கு சென்று அவருடைய குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தெற்கு காஷ்மீரில் பொதுவாக அமைதி நிலவினாலும், சில கல்வி நிறுவனங்களில் சிறு சிறு போராட்டங்கள் மூலம் வன்முறை நடந்து வருகிறது. நான்கு, ஐந்து கல்லூரிகளை சேர்ந்த சுமார் 50 மாணவர்கள்தான் ரகளையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தெற்கு காஷ்மீரில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் தீவிரமாக இயங்கி வருகிறார்கள். அவர்களை ஒடுக்க ராணுவ நடவடிக்கை மும்முரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் ஷோபியான் மாவட்டத்தில் வீடு வீடாக தேடுதல் வேட்டை நடந்தது. ராணுவ நடவடிக்கைக்கு இடையூறாக உள்ள இடங்களில் மட்டுமே அத்தகைய தேடுதல் வேட்டை நடத்தப்படும்.

பயங்கரவாதிகள் புதிதாக ஆள்சேர்ப்பில் ஈடுபடுவதை தடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம். அவர்களின் வலையில் விழ வாய்ப்புள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வீடுகளுக்கு போலீசாருடன் சேர்ந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, காஷ்மீர் மாநிலத்தின் செனாப் பள்ளத்தாக்கு பகுதியில் பயங்கரவாதத்தை உயிர்ப்பிக்க முயன்று வந்த லஷ்கர்-இ-தொய்பா ஆதரவாளர்கள் 7 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். உளவுத்துறை தகவலின் அடிப்படையில், அப்துல் ரஷித் என்பவனை சிறப்பு புலனாய்வுக்குழு பிடித்தது. அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறப்பு போலீஸ் அதிகாரி அல்டாப் அகமது, பிராந்திய ராணுவத்தில் பணியாற்றிய பஷிர் அகமது உள்பட 6 பேர் பிடிபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com