

நாகர்கோவில்:
குமரி மாவட்ட ராஜாக்கமங்கலம், தோவாளை, அகஸ்தீஸ்வரம், குருந்தன்கோடு ஒன்றியத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள் உள்பட ஏராளமானோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
100 நாள் வேலை திட்டத்தின்படி நடைபெறும் பணிகள் அனைத்தும் பஞ்சாயத்து தலைவர்கள் நேரடி கண்காணிப்பில் கண்காணிக்கப்பட்டு பணியாளர்களுக்கு தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டத்தின் மூலம் சாலை அமைத்தல், சிமெண்ட் தளம் அமைத்தல், அலங்கார கற்கள் பதித்தல் போன்ற வேலைகளும் கலெக்டர் உத்தரவின் பேரில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் ஒப்பந்தம் இன்றி துறைவாரியாக செயல்படுத்த வேண்டி உள்ளதால் ஊராட்சி செயலாளர் மற்றும் செயலாளர் பிரிவு அலுவலர் பெயரில் வேலை உத்தரவு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், ஒரு சில ஒன்றியங்களில் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர், பஞ்சாயத்து தலைவரை கலந்தாலோசிக்காமல் ஒன்றிய ஒப்பந்தக்காரர்கள் மூலம் பணிகளை செயல்படுத்த உத்தரவு வழங்கியுள்ளதாக தெரியவருகிறது. எனவே இந்த பணியை பஞ்சாயத்து தலைவர்கள் நேரடியாக செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.
மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதிகள் அனைத்தும் பஞ்சாயத்து மன்றங்களில் நேரடியாக மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. அதில் தேர்வு செய்யப்படும் பணிகள் அனைத்தும் பஞ்சாயத்தில் ஒப்பந்தப்புள்ளி கோருவது நடைமுறையாகும். தற்போது அந்த நடைமுறையை மாற்றி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஒப்பந்தம் கோருதல் நடைபெற உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இது பஞ்சாயத்துகளின் உரிமையை பறிக்கும் செயலாகும். மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் பஞ்சாயத்துகளில் அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான நிதியை பஞ்சாயத்து மன்றங்களுக்கு நேரடியாக வழங்காமல் மாவட்ட கலெக்டர் மூலம் டெண்டர் விட இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இது பஞ்சாயத்து மன்றங்களின் அதிகாரத்தை முற்றிலுமாக கைப்பற்றும் செயலாகும். இத்தகைய முடிவை கைவிட்டு பழைய முறையை கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.