

டாக்கா:
வங்காளதேசம் நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த 2000-ம் ஆண்டில் தனது சொந்த ஊரான கோபால்கஞ்ச் பகுதியில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, அந்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள ஹர்க்கத்துல் ஜிஹாத்-இ-இஸ்லாமி அமைப்பினர் அவரை வெடிகுண்டுகளின் மூலம் கொல்ல முயன்றனர்.
பாதுகாப்பு படையினர் இந்த கொலை முயற்சியை முறியடித்து உரிய நேரத்தில் வெடிகுண்டுகளை கைப்பற்றி செயலிழக்க வைத்தனர். இந்த கொலை முயற்சி தொடர்பாக சுமார் 25 பேர்மீது டாக்காவில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் தொடர்புடையை ஹர்க்கத்துல் ஜிஹாத்-இ-இஸ்லாமி அமைப்பின் தலைவர் மற்றொரு தீவிரவாத தாக்குதல் தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு தூக்கிலிட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில், ஷேக் ஹசீனாவை கொல்ல முயன்ற வழக்கில் இன்று நீதிபதி மம்தாஜ் பேகம் தீர்ப்பளித்தார்.
குற்றவாளிகளில் பத்து பேருக்கு மரண தண்டனையும், ஒன்பது பேருக்கு அபராதத்துடன் கூடிய 20 ஆண்டு சிறை தண்டனையும் விதித்த நீதிபதி, நான்கு பேரை இவ்வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.
கடந்த 2004-ம் ஆண்டில் ஷேக் ஹசீனாவை கொல்ல முயன்ற இன்னொரு வழக்கின் விசாரணை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இவ்வழக்கில் தலைமறைவு குற்றவாளியாக முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் இணைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பும் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.