குன்னூர் அருகே தொழிலாளி வீட்டில் ஜன்னலை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

குன்னூர் அருகே தொழிலாளி வீட்டில் ஜன்னலை உடைத்து 10 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கொள்ளை
கொள்ளை
Published on

குன்னூர்:

குன்னூர் அருகே உள்ள கிளண்டேள் பகுதியை சேர்ந்தவர் சண்முகம்(வயது60). இவர் அந்த பகுதியில் உள்ள தொழிற்சாலை பூங்காவில் பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் தினமும் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். நேற்றும் வழக்கம் போல் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.

இந்த நிலையில் சண்முகம் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் ஜன்னல் உடைந்து கிடந்தது. இதனை பார்த்து பதறிப்போன அவர் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் பீரோவில் இருந்த 10 பவுன் நகை காணாமல் போய் இருந்தது.

வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் ஜன்னலை உடைத்து நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சண்முகம் கொலக்கொம்பை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com