‘கலாம் சாட்’ தயாரித்த மாணவர் குழுவுக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலைகள்: முதல்-அமைச்சர் வழங்கினார்

‘கலாம் சாட்’ தயாரித்த மாணவர் குழுவுக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
‘கலாம் சாட்’ தயாரித்த மாணவர் குழுவுக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலைகள்: முதல்-அமைச்சர் வழங்கினார்
Published on

சென்னை:

‘கலாம் சாட்’ தயாரித்த மாணவர் குழுவுக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியை சேர்ந்த மாணவர் ரிபாத் சாருக் தலைமையிலான 6 மாணவர்கள் கொண்ட குழு 64 கிராம் எடை கொண்ட மிகச் சிறிய செயற்கைகோளை உருவாக்கினர். அவர்கள் உருவாக்கிய இந்த செயற்கைகோள் அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான “நாசா” நடத்திய போட்டியில் கலந்துகொண்டு, உலகத்தின் 57 நாடுகளிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட 80 ஆயிரம் மாதிரிகளில் முதல் பரிசு பெற்றது.

இந்த செயற்கைகோள் கடந்த ஜூன் 22-ந் தேதி விண்ணில் “கலாம் சாட்” என்ற பெயரில் “நாசா” ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. முப்பரிமாண அச்சுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைகோள் வானிலை, வான்வெளியில் உள்ள கதிர்வீச்சு, வெப்பம் ஆகியவற்றை ஆராயும் திறன் கொண்டது.

இந்த சாதனையை படைத்து, இந்தியாவிற்கு, குறிப்பாக தமிழகத்திற்கு பெருமைத் தேடித் தந்த மாணவர் ரிபாத் சாருக் தலைமையிலான மாணவர்கள் யக்னா சாய், வினய் பரத்வாஜ், தனிஷ்க் திவேதி, கோபிநாத் மற்றும் முகம்மது அப்துல் காசிப் ஆகியோருக்கு மேலும் இதுபோன்ற பல சாதனைகளை செய்ய ஊக்கப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசின் சார்பில் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் கடந்த ஜூன் 24-ந் தேதி அறிவித்தார்.

அதன்படி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இச்சாதனை படைத்த ரிபாத் சாருக் தலைமையிலான மாணவர் குழுவினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை ஊக்கத்தொகையாக வழங்கி, அம் மாணவர்களை பாராட்டினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com