

ஐ.நாவின் குழந்தைகள் நிதியம், உலக சுகாதார நிறுவனம், ஐ.நா மக்கள் தொகை பிரிவு மற்றும் உலக வங்கி இணைந்து சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வின் அறிக்கை இப்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை குறித்து பேசிய ஆய்வுக்குழுவின் தலைவர் லாரன்ஸ் சாண்டி, ஒவ்வொரு ஆண்டும் 15 வயதுக்கு உட்பட்ட 6.3 மில்லியன் குழந்தைகள், சரிசெய்யக்கூடிய சாதாரண காரணங்களினால் உயிரிழப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
1990-ஆண்டுக்கு பிறகு குழந்தைகள் இறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும், இருப்பினும் இன்றும் குழந்தைகளின் உயிரிழப்பு தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இன அடிப்படையில் குழந்தைகள் இறப்பு அமைவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், 2018-ல் இருந்து 2030-க்குள் 5 வயதுக்கும் குறைவான 56 மில்லியன் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் எனவும் அந்த ஆய்வுக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. மிகச்சாதாரண வழிமுறைகளான நல்ல உணவு, குடிநீர் மருத்துவம் போன்றவற்றால் இறப்பு விகிதத்தை கணிசமாக குறைக்க முடியும் எனவும் அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், அதிக அளவிலான நாடுகளில் கிராமப்புற பகுதிகளிலேயே குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாகவும், படிப்பறிவு அற்ற பெற்றோர்களினால் தங்கள் குழந்தைகளை முறையாக பேண முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.