

அமெரிக்காவில் உள்ள டோலிடோ மருத்துவமனையில் பெண் ஊழியர்களின் ஓய்வறைகளில் ரகசியமாக கேமரா வைத்து பதிவு செய்த இந்திய வம்சாவளியான மருத்துவர் அத்வைத் தேஸ்முக்கிற்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆதாரங்களைத் திருத்த முயன்ற குற்றச்சாட்டு உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து, தேஷ்முக்கிற்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.
டோலிடோ மருத்துவமனையில் இருபாலர் பயன்படுத்தும் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைபேசியை மருத்துவமனை ஊழியர் ஒருவர் கண்டுபிடித்தார்.
இதையடுத்து புரோமெடிகா மற்றும் டோலிடோ காவல்துறை இணைந்து நடத்திய விசாரணையில், 2025 பிப்ரவரியில் அந்தத் தொலைபேசியில் எடுக்கப்பட்ட 82 புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
குற்றங்கள் நடந்த நேரத்தில், தேஷ்முக் டோலிடோ பல்கலைக்கழகத்தில் எண்டோயுரோலஜி மற்றும் சிறுநீரகப் புற்றுநோயியல் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற மூன்றாம் ஆண்டு மருத்துவப் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார்.
அந்த கேமரா கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, தேஸ்முக் நிர்வாக விடுப்பில் வைக்கப்பட்டு, அவரது பயிற்சி மருத்துவ நியமனம் புதுப்பிக்கப்படவில்லை என்று டோலிடோ பல்கலைக்கழகம் தெரிவித்தது.
தண்டனை அறிவிப்பின் போது தேஷ்முக் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
குற்றங்களுக்கு வழிவகுத்த நடத்தையை நன்கு புரிந்துகொள்வதற்காக தேஷ்முக் சிகிச்சை பெற்று வருவதாக வாதிட்ட அவரது வழக்கறிஞர், சிறைத் தண்டனைக்குப் பதிலாக நன்னடத்தை தண்டனை விதிக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட தேஷ்முக், மூன்று ஆண்டுகள் நன்னடத்தை கண்காணிப்பு, 15 ஆண்டுகளுக்கு பாலியல் குற்றவாளியாகப் பதிவு செய்தல், பாலியல் குற்றவாளி மற்றும் மனநல சிகிச்சையைத் தொடருமாறு நீதிபதி மைக்கேல் கோல்டிங் உத்தரவிட்டார்.