வேலைக்குச் செல்லும் பெண்கள் செய்யும் தவறுகள்

சமையல், குழந்தைகள், கணவர், தன் வேலை அலுவக வேலையில் ஆரம்பித்து இரவு வீட்டு வேலை வரை நிற்காமல் சுழன்று கொண்டிருக்க வேண்டிய பணி, வேலைக்குச் செல்லும் பெண்களுடையது.
வேலைக்குச் செல்லும் பெண்கள் செய்யும் தவறுகள்
Published on

கூட்டுக் குடும்பம் அரிதாகிவிட்டதால், அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களில் பலர், குழந்தையைப் பக்கத்தில் உள்ள வீட்டார்களிடம் ஒப்படைக்கிறார்கள். இது, குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் உள்ள நெருக்கத்தை உடைக்கும். தவிர, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல் அதிகரித்துவரும் சூழலையும் மனதில்கொள்ள வேண்டும். எனவே, தனது அல்லது கணவனின் தாய் போன்ற நெருங்கிய உறவினரிடம் ஒப்படையுங்கள். முடியாதபட்சத்தில், தரமான குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைப்பது நல்லது.

அலுவலகத்தில் அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, சில பெண்கள் எப்போதுமே மேக்கப்பில் இருப்பார்கள். அந்த அழகு சாதனப் பொருள்களை எவ்வளவு பயன்படுத்த வேண்டும், எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற முறையான வழிகாட்டல் இல்லாமல், இஷ்டத்துக்குப் பயன்படுத்துவார்கள். இது, சரும பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, தோல் மருத்துவரை அணுகி, உங்களின் ஸ்கினுக்கு ஏற்றதைத் தேர்வுசெய்து, சரியான அளவில் பயன்படுத்துங்கள். அழகுடன் ஆரோக்கியமும் இருக்கும்.

பல பெண்கள் அலுவலக வேலையையும் வீட்டு வேலையையும் சமன் செய்வதில்தான் பல இடையூறுகளைச் சந்திக்கின்றனர். சரியான திட்டமிடலுடன் செயல்படுவதன் மூலம் இந்தப் பிரச்சனையைத் தவிர்க்கலாம். அலுவலகப் பணியை வீட்டில் பார்க்கும்போது, உங்கள் குழந்தை மற்றும் கணவருக்குச் செலவிடும் நேரத்தையும் அன்பையும் இழக்கிறீர்கள் என்பதை மனதில்கொண்டு, திட்டமிட்டுச் செயல்படுங்கள்.

அலுவலகம் செல்லும் பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால், மாதவிடாய் நாள்கள். அதிக வேலை, ஆண்களுக்கு மத்தியில் பணிபுரியும் சூழல் போன்றவற்றால், நாப்கின்களை கழிப்பறைக்கு எடுத்துச்செல்லத் தயங்கி, மணிக்கணக்கில் மாற்றாமல் இருப்பார்கள். இது, தொற்றுநோய், சரும அலர்ஜி போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.

அலுவலகம் செல்லும் பெண்களில் 90% பேர், அலுவலகத்துக்கு போடும் துணிகளைத்தவிர மற்ற நாள்களில் பயன்படுத்திய துணிகளை ஒரு கூடையிலோ, வீட்டின் ஓரத்திலோ போட்டு வைத்திருப்பார்கள். நாம் பயன்படுத்திய ஆடைகளில் வியர்வையின் காரணமாக பாக்டீரியா, கிருமிகள் இருக்கும். இது வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு உடையவர்களுக்குக் கெடுதல் ஏற்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com