

'குழந்தை பிறந்தவுடனேயே தாய்க்கு இயற்கையாக பால் சுரப்பு தொடங்கிவிடும். முதலில் வெளியேறும் மஞ்சள் நிற சீம்பாலை பலர் குழந்தைகளுக்குத் தருவதைத் தவறவிட்டு விடுகிறார்கள். இது தவறு. சீம்பாலில்தான் கொலஸ்ட்ரம் எனப்படும், குழந்தைக்கு எதிர்ப்புசக்தியை அளிக்கும் ஆற்றல் அதிகளவில் உள்ளது. ஆறு மாதங்களுக்கு கண்டிப்பாக குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும்.
அதற்காகத்தான் அரசு, தனியார் நிறுவனங்களில் ஆறு மாதகால பேறுகால விடுப்பு அளிக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பலர் வேலைக்குச் சென்றவுடன் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடுகின்றனர். வேலைக்குச் சென்றால்கூட பிரஸ்ட் பம்ப் மூலம் பாலை எடுத்து ஃபிரிட்ஜில் வைத்து குழந்தைக்குப் புகட்டச் செய்யலாம். வேலை நேரம் தவிர, மற்ற நேரங்களில் குறைந்தபட்சம் ஓர் ஆண்டில் இருந்து அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை தாய் குழந்தைக்குப் பாலூட்ட வேண்டும்.
செயற்கைப் பால் பவுடர் பயன்படுத்தும்போது குழந்தைக்கு செரிமானக் கோளாறுகள், அதைப் புகட்டும் பாட்டில்களால் தொற்றுகள் என பல பிரச்னைகள் ஏற்படும். தாய் தன் சுத்தத்துடன் குழந்தைக்குப் பாலூட்டுவதன் மூலம் ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு உட்பட பல்வேறு நோய்களில் இருந்து குழந்தையைக் காப்பாற்ற முடியும். தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டம் பல பெண்களுக்கு கர்ப்பத்தடைக்கான நாள்களாக இருப்பதுவும் நடைமுறை உண்மை. தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மார்பகம் மற்றும் சினைப்பை புற்றுநோய் வருவது பெருமளவு குறைகிறது என்பது ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
தாய்ப்பால் கொடுப்பது என்பதை பெண்கள் கடமைக்காகச் செய்யாமல் முழு மனதோடு, கவனச்சிதறல் இல்லாமல், சரியான பொசிஷனில் அமர்ந்து தரவேண்டும். தாய்க்கும், சேய்க்கும் பாசப்பிணைப்பை பலப்படுத்துவது தாய்ப்பால். சில காரணங்களால் மிகச் சில பெண்களைத் தவிர, எல்லா பெண்களுக்கும் தாய்ப்பால் சுரப்பு போதுமான அளவு இருக்கும்.