

நமது நுரையீரலுக்குச் செல்லும் காற்றின் சீதோஷ்ண மற்றும் தட்பவெப்ப நிலையைச் சீர் செய்ய 4 ஜோடி சைனஸ்கள் நம் மூக்கைச் சுற்றி உள்ளன.
இவை சிறிய துவாரங்கள் மூலமாக மூக்குடன் இணைந்திருக்கின்றன. இந்தத் துவாரங்களில் ஒவ்வாமையாலோ, தொற்றாலோ, உறுத்தலாலோ, மூக்கின் அமைப்பில் ஏற்படும் மாற்றத்தாலோ, அடைப்பு ஏற்படும்போது பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
சைனஸ் தொந்தரவுகளைத் திடீரென ஏற்படுபவையாகவும், நாட்பட்டவைகளாகவும் பிரிக்கலாம். சளி பிடித்ததற்குப் பின் ஒன்று அல்லது 2 வாரங்களுக்கு மஞ்சள் பச்சை நிறத்தில் மூக்கில் இருந்து சளி வரும். இதனுடன்கூட கன்னம், கண்கள் மற்றும் தலையில் வலி ஏற்படும். வீக்கம் மற்றும் ஜுரம் ஏற்படலாம்.
தொடர்ந்து பல வாரங்கள் மேற்கூறிய அறிகுறிகள் நீடிக்குமானால், இதை நாட்பட்ட சைனஸ் பிரச்சினை எனக் கூறலாம். இதில் மேற்கூறிய அறிகுறிகளுடன் மூக்கடைப்பு, ஜுரம், வாசனை உணர்வு குறைந்து போதல், முகத்தில் வலி மற்றும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
திடீரென ஏற்படும் பிரச்சினைகளை ஆன்டிபயாடிக்ஸ் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் மருந்துகள் மூலம் சரி செய்யலாம். நாட்பட்ட பிரச்சினைகளுக்கு தொடர்ந்து மருந்துகள் உட்கொள்ள வேண்டி இருக்கும்.
சைனஸ்கள் தலையில் பல முக்கிய உறுப்புகளுக்கு நடுவில் அமைந்திருப்பதால், இதில் பாதிப்பு ஏற்பட்டு கவனிக்காமல்விடும்பொழுது அருகில் உள்ள கண், மூளை மற்றும் இவற்றைக்கொண்டுள்ள எலும்புகளையும் பாதிக்கும் வாய்ப்பு அதிகம். முக்கியமாக, ஆஸ்துமா நோய் மோசமாகும். காலப்போக்கில் சுவை மற்றும் மணத்தை உணரும் சக்தியைக் குறைக்கும்.