உயிருக்கு ஆபத்தாகும் Heat Stroke: அறிகுறிகளும், உடனடி முதலுதவிகளும்!

தாகம் எடுக்காவிட்டாலும் அடிக்கடி போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
Life-Threatening Heat Stroke
Published on

தமிழகத்தில் நடப்பு 2026-ஆம் ஆண்டின் கோடை வெயில் வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்கி, தற்போது பல மாவட்டங்களில் சதமடித்து வாட்டி வதைத்து வருகிறது. சென்னை, வேலூர், திருச்சி, மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெப்ப அலையில் இருந்து நம்மை தற்காத்து கொள்வது எப்படி என்று விரிவாகப் பார்க்கலாம்.

உடல் வெப்பநிலையும் அதன் பாதிப்புகளும்:

மனித உடலின் இயல்பான வெப்பநிலை **36.1°C முதல் 37.5°C** வரை இருக்க வேண்டும். வளிமண்டல வெப்பநிலை அதிகரித்து, காற்றில் ஈரப்பதம் அதிகமாகும் போது, உடலால் வியர்வை மூலம் வெப்பத்தை முறையாக வெளியேற்ற முடிவதில்லை. உடல் வெப்பநிலை மாறுபடும் போது தீவிர உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டு, சில நேரங்களில் உயிரிழப்புகளும் நிகழலாம்.

மருத்துவ ரீதியாக வெப்பப் பாதிப்புகள் 2 வகையாகப் பிரிக்கப்படுகின்றன:

1.Exertional Heat Stroke: அதிக வெயில் உள்ள நேரங்களில் கடுமையான உடலுழைப்பில் ஈடுபடுபவர்கள் மற்றும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இது ஏற்படுகிறது.

2.Classic/Non-Exertional Heat Stroke: முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நாள்பட்ட நோய் பாதிப்பு உள்ளவர்களை இது எளிதில் தாக்குகிறது.

அறிகுறிகள் என்னென்ன:

வெப்பத்தின் தாக்கம் உடலைத் தாக்கும் போது லேசான அறிகுறிகளில் தொடங்கி, தீவிரமான நிலை வரை செல்லக்கூடும்.

1.வெப்பப் பிடிப்பு / சோர்வு (Heat Exhaustion):

* அதிகப்படியான வியர்வை மற்றும் உடல் சோர்வு.

* உடல் வலி மற்றும் தசைப் பிடிப்பு (கால் பிடிப்புகள்).

* வெளிறிய அல்லது ஈரமான தோல், கடுமையான தலைவலி.

* குமட்டல், வாந்தி, நெஞ்சு படபடப்பு மற்றும் தலைசுற்றல்.

2. வெப்பப் பக்கவாதம் (Heat Stroke -உயிருக்கு ஆபத்தானது):

* உடலின் வெப்பநிலை **40°C (104°F) க்கும் மேல் அதிகரித்தல்.

* வியர்வை முற்றிலும் நின்றுபோய், தோல் சூடாகவும் சிவப்பாகவும் மாறுதல்.

* மனக்குழப்பம், பேச்சு தடுமாற்றம், வலிப்பு ஏற்படுதல் மற்றும் நினைவிழத்தல்.

மேலே குறிப்பிட்டுள்ள கடுமையான அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும் அல்லது 108 அவசர உதவி எண்ணைஅழைக்க வேண்டும்.

முதலுதவிக்கு என்ன செய்ய வேண்டும்?

ஒருவர் வெப்ப அலையினால் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தாலோ அல்லது தீவிர சோர்வடைந்தாலோ செய்ய வேண்டியவை:

* பாதிக்கப்பட்டவரை உடனடியாக வெயில் இல்லாத குளிர்ந்த நிழற்பாங்கான இடத்திற்கு மாற்ற வேண்டும்.

* அவரது உடலை இறுக்காதவாறு ஆடைகளைத் தளர்த்த வேண்டும் அல்லது தேவையற்ற ஆடைகளைக் கழற்ற வேண்டும்.

* ஐஸ் கட்டிகள் இருந்தால் துணியில் சுற்றி தலையில் வைக்கலாம்.

* குளிர்ந்த நீரைக் கொண்டு உடல் முழுவதும் துடைக்க வேண்டும்.

* உடனடியாக மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள்:

உடல் நீரேற்றம்:

தாகம் எடுக்காவிட்டாலும் அடிக்கடி போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். எலுமிச்சை சாறு, மோர், இளநீர் மற்றும் உப்பு-சர்க்கரை கரைசல் (ORS) போன்றவற்றை அருந்தலாம்.

ஆடைத் தேர்வு:

வெப்பத்தை ஈர்க்கும் கறுப்பு அல்லது அடர் நிற ஆடைகளைத் தவிர்த்து, தளர்வான, வெளிர் நிற காட்டன் ஆடைகளை அணிய வேண்டும்.

பாதுகாப்பு உபகரணங்கள்:

வெளியில் செல்லும் போது குடைகள், தொப்பிகள் மற்றும் சன்ஸ்கிரீன் லோஷன்களைப் பயன்படுத்தலாம். கையில் எப்போதும் தண்ணீர் பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

செய்யக் கூடாதவை:

மதிய நேரப் பயணம்:

மதிய நேரங்களில் (குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை) அவசியமின்றி வெளியில் செல்வதையோ அல்லது கடுமையான வேலைகளில் ஈடுபடுவதையோ தவிர்க்க வேண்டும்.

செயற்கைக் குளிர்பானங்கள்:

காபி, டீ மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இவை உடலில் உள்ள நீர்ச்சத்தை வேகமாக வற்றச் செய்து (Dehydration) ஆபத்தை அதிகரிக்கும்.

வாகன எச்சரிக்கை:

வெயில் நேரங்களில் கார் போன்ற மூடிய வாகனங்களுக்குள் குழந்தைகள் அல்லது செல்லப் பிராணிகளைத் தனியாக அமர வைக்கக் கூடாது. மூடிய வாகனங்களில் வெப்பநிலை மிக வேகமாக உயரும்.

வெறும் கால் நடை:

கோடை வெயிலில் காலணிகள் (செருப்பு) அணியாமல் வெறும் காலில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும். அனைவரும் தங்களின் சுய பாதுகாப்பில் கூடுதல் விழிப்புணர்வுடன் இருப்பது இந்த கோடைக் காலத்தை நலமுடன் கடக்க உதவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com