எப்படி இருக்கிறது ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே? - திரைவிமர்சனம்
ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே? - திரைவிமர்சனம்(3.5 / 5)
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் உடைய சூப்பர் ஹீரோக்களில் எத்தனை 'மேன்'கள் வந்தாலும், ஸ்பைடர்மேனுக்கு ரசிகர்கள் மனதில் தனியிடம் உண்டு. அதற்கு முக்கிய காரணம் சாம் ரெய்மி இயக்கத்தில் டாபி மேக்குய்ரி ஸ்பைடர்மேனாக நடித்து வெளிவந்த ட்ரையாலஜி.
அவர் 90ஸ் கிட்ஸ்க்கான ஸ்பைடர் மேன் என்றால், தற்போதுள்ள ஜென் இசட் தலைமுறைக்கான ஸ்பைடர் மேன் டாம் ஹாலண்ட். 2017 இல் வெளியான ஸ்பைடர் மேன்: தி ஹோம்கம்மிங்' படத்தின் மூலம் முதல் முதலில் பீட்டர் பார்க்கராக ஸ்பைடர் மேன் முகமூடி அணிந்தார் டாம். அதைத் தொடர்ந்து இரண்டாம் பாகமான நோ வே ஹோம் வெளிவந்தது. தற்போது மூன்றாம் பாகமான 'பிராண்ட் நியூ டே' வெளியாகி உள்ளது.
முதல் இரண்டு படங்கள் மீது ஒரு விமர்சனம் உண்டு. அதாவது அவை நவீன தொழில்நுட்பங்களுடன் ஆக்ஷன் மற்றும் விஷூவலில் கலக்கி இருந்தாலும், அதில் டாபி மேக்குய்ரியின் பீட்டர் பார்க்கர் (ஸ்பைடர் மேன்) உடைய எமோஷனல் டெப்த் இல்லை என்று கூறப்பட்டது.
இந்த வாட்டத்தை போக்கும் வகையில் எமோஷனல் மற்றும் விஷுவல் என இரண்டிலும் சொல்லி அடித்திருக்கிறது பிராண்ட் நியூ டே. ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்துக்கு முன்னெப்போதையும் விட இந்த படத்தில் கச்சிதமாக பொருந்திப்போயிருக்கிறார் டாம் ஹாலண்ட்.
சரி கதைக்கு வருவோம்..
இரண்டாம் பாகமான 'நோ வே ஹோம்' இறுதியில், உலகை காக்க டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் செய்யும் ஒரு மந்திரத்தால், உலகம் முழுமைக்கும் பீட்டர் பார்க்கர் (டாம் ஹாலண்ட்) யார் என்பதே மறந்துபோகிறது.
காதலி எம்.ஜே (ஜெண்டயா), நண்பன் நெட் (ஜேக்கப் படலான்) என அனைவரும் பீட்டரை மறந்துவிடுகின்றனர். ஆண்ட் மே-வையும் இழந்து நிலையில் நியூயார்க் நகரின் சிறிய வாடகை வீட்டில் முற்றிலும் தனிமையில் வாழ்கிறான் பீட்டர் பார்க்கர்.
ஒருபுறம் ஸ்பைடர் மேனாக உதவிகள் புரியும் பார்க்கர், முற்புறம் தனது நண்பர்கள் எப்படி இருக்கிறார்கள் என அவர்களின் வாழ்க்கையை சமூக வலைத்தளங்கள் மூலம் கவனித்து வருகிறான்.
மனிதர்களின் மனதைக் கட்டுப்படுத்தி, உடல்களை மாற்றி மாற்றி இயக்கும் ஒரு சக்திவாய்ந்த எதிரி உருவாகிறான். இந்த அமானுஷ்ய மாற்றங்கள் பொது மக்களை வன்முறையாளர்களாக மாற்றுகின்றன.
'டேமேஜ் கன்ட்ரோல்' என்ற அமைப்பின் தலைமையகத்தில் மறைக்கப்பட்டுள்ள ஏதோ ஒன்றை வேட்டையாடத் துடிக்கும் அந்த எதிரியை தடுக்கப் புறப்படுகிறான் பீட்டர்.
படத்தின் மிக முக்கியமான அம்சம், பீட்டர் பார்க்கரின் உளவியல் மற்றும் உடலியல் போராட்டம். தனிமையின் விளைவாக உடலில் ஏற்கெனவே மாற்றமடைந்த சிலந்தி டிஎன்ஏ மீண்டும் மாறத் தொடங்குகிறது. கட்டுப்பாடற்ற இயற்கையான வலை உற்பத்தி என அவனது உடலே அவருக்கு எதிராக மாறுகிறது.
எதிரியை எதிர்கொள்ளும்போது பீட்டருக்குப் பனிஷர் (ஜான் பெர்ன்தல்), ஹல்க் (மார்க் ரப்பாலோ) மற்றுமொரு மர்ம பெண் ஆகியோரின் தொடர்புகள் கிடைக்கின்றன. அவர்கள் உதவியுடன் எதிரியை தடுத்து நிறுத்தினானா பார்க்கர், காதலி எம்ஜேவும், நண்பனும் என்ன ஆனார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிப்பு
பள்ளிப் பருவத்துத் துள்ளலுடன் வலம் வந்த பீட்டர் பார்க்கராக இல்லாமல், இழப்புகளின் பாரத்தைச் சுமக்கும் ஒரு முதிர்ச்சியான இளைஞனாக டாம் ஹாலண்ட் மிளிர்கிறார்.
வசனங்களை விடவும் அவரது அமைதியும், கண்களில் தென்படும் ஏக்கமும் தனிமையின் வலியும் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கின்றன.
முன்னரே குறிப்பிட்டதுபோல பீட்டர் பார்க்கரின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் டெஸ்டின் டேனியல் கிரெட்டன்.
எம்.ஜே (செண்டாயா) தன்னை யாரென்றே அறியாத நிலையிலும், அவளைப் பாதுகாக்க பீட்டர் எடுக்கும் முயற்சிகள் நெகிழ்ச்சியானவை. இருவருக்குமிடையேயான உணர்வுப்பூர்வமான உரையாடல்கள் படத்திற்கு பெரிய பலம்.
ஸ்பைடர் மேனின் மென்மையான அணுகுமுறைக்கு நேர்மாறான கோபக்காரராக பனிஷராக ஜான் பெர்ன்தலின் வருகை, அவருடனான பீட்டரின் உரையாடல்கள் தனி ரகம்.
பீட்டருக்கு ஒரு வழிகாட்டியாக வந்து செல்லும் மார்க் ரப்பாலோ ப்ரூஸ் பேனர் (ஹல்க்) பாத்திரத்தில் தன் பங்கை செய்திருக்கிறார்
படத்தின் இரண்டாம் பாதியில் கதையின் போக்கையே மாற்றும் மர்மமான கதாபாத்திரத்தில் சாடி சிங்க் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இயக்கம்
நியூயார்க் நகரத்தை மிக அமைதியான, சற்றே இருண்ட பின்னணியில் பீட்டரின் உள்ளுணர்வுகளுடன் பொருந்தும் வகையில் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் டெஸ்டின் டேனியல் கிரெட்டன்.
வானளாவிய கட்டிடங்களுக்கு இடையே ஸ்பைடர் மேன் பறந்து செல்லும் சண்டைக் காட்சிகள் மற்றும் முதல் நபர் பார்வையில் உணர்வைத் தரும் கேமரா நகர்வுகள் திரையரங்க அனுபவத்திற்கு விருந்து. படத்தின் இசையை மைக்கேல் கியாச்சினோ மேற்கொண்டுள்ளார்.
மொத்தத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு மார்வெல் ரசிகர்களுக்கு நிறைவான அனுபவத்தைத் தரும் படமாக பிராண்ட் நியூ டே அமைந்துள்ளது.

