பாலன்: தி பாய் - திரைவிமர்சனம்
பாலன்: தி பாய் - திரைவிமர்சனம்

பாலன்: தி பாய் - திரைவிமர்சனம்

மகனை பார்த்துக் கொள்ளும் தாயின் பாசத்தையும், உள்ளுக்குள் இருக்கும் பதற்றத்தையும் கண்களிலேயே கடத்தி விடுகிறார்.
Published on
பாலன்: தி பாய் - திரைவிமர்சனம் (2.5 / 5)

கதை

கர்ப்பிணியாக சிறை தண்டனை அனுபவித்து வரும் ஃபர்சானா பலதிங்கல், சிறையிலேயே ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலையாகும் அவர், கடந்த காலத்தில் சந்தித்த வலிகளாலும், துரோகங்களாலும் யார் மீதும் நம்பிக்கை வைக்க முடியாமல், தனது மகனுடன் இடம் இடமாக அலைந்து வாழ்கிறார்.

ஒரு கட்டத்தில் தனியாக வசிக்கும் வயதான பெண்ணை கவனித்துக் கொள்ளும் வேலை கிடைக்க, அங்கேயே நிரந்தரமாக தங்க முடிவு செய்கிறார். மகனையும் பள்ளியில் சேர்த்து அமைதியான வாழ்க்கையை தொடங்குகிறார். ஆனால், கடந்த காலத்தின் நிழல்கள் அவரை தொடர்ந்து துரத்திக்கொண்டே இருக்கின்றன. அதனால் தினமும் பள்ளியில் இருந்து வரும் மகனை ஒரு குறிப்பிட்ட இடத்தில் காத்திருக்க சொல்லி, “அம்மா கண்டிப்பாக வருவேன்” என உறுதியளிக்கிறார்.

ஆனால் ஒரு நாள் அவர் வரவில்லை. நீண்ட நேரம் காத்திருந்த சிறுவனை பொதுமக்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கிறார்கள். இறுதியில் அம்மாவுக்கு என்ன ஆனது? மகன் மீண்டும் தன் அம்மாவை சந்தித்தானா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிப்பு

படத்தின் மிகப்பெரிய பலமே ஃபர்சானா பலதிங்கலின் நடிப்பு. எப்போதும் ஒரு பயத்துடனும், குற்ற உணர்வுடனும் வாழும் பெண்ணின் மனநிலையை மிகவும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக மகனை பார்த்துக் கொள்ளும் தாயின் பாசத்தையும், உள்ளுக்குள் இருக்கும் பதற்றத்தையும் கண்களிலேயே கடத்தி விடுகிறார்.

சிறுவன் பாலனாக நடித்திருக்கும் ஆதிசேஷன் கே.ஆர்., பல காட்சிகளில் வசனங்களை விட தனது முகபாவனைகளால் கவனம் ஈர்க்கிறார். அம்மாவை தேடும் ஏக்கமும், தனிமையின் வலியும் அவரது நடிப்பில் நன்றாக வெளிப்படுகிறது. வளர்ந்த பாலனாக வரும் ஜினனும் உணர்வுப்பூர்வமான நடிப்பால் கதைக்கு வலு சேர்த்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜீன் பவுல் லால், தனது கதாபாத்திரத்தின் கோபம் மற்றும் பழிவாங்கும் மனநிலையை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். சிறப்பு தோற்றத்தில் வரும் டொவினோ தாமஸின்  நடிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

இயக்கம்

எளிமையான கதையை பரபரப்பும் உணர்வும் கலந்த திரைக்கதையாக மாற்றியிருக்கும் ஜித்து மாதவனின் எழுத்து பாராட்டுக்குரியது. அதை இயக்குநர் சிதம்பரம் மிகவும் நேர்த்தியாக கையாள்ந்து, ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை கதையுடன் பயணிக்க வைத்திருக்கிறார்.

பெரிய ஆக்‌ஷன், மாஸ் காட்சிகள் எதுவும் இல்லாமல், ஒரு தாய் - மகன் உறவின் வலியையும் பாசத்தையும் மையமாக வைத்து நகரும் இந்த படம், பல இடங்களில் மனதை நெகிழ வைக்கிறது. சில இடங்களில் கதை மெதுவாக நகர்ந்தாலும், அதனை மீறி உணர்வுகள் வேலை செய்கின்றன.

ஒளிப்பதிவு - இசை

ஒளிப்பதிவாளர் ஷைஜு காலித், கதையின் அமைதியையும் தனிமையையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.  சுஷின் ஷாமின் பின்னணி இசை உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு மேலும் ஆழம் சேர்க்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com