ஆர்.கே.நகர் மக்களை இழிவாக பேசியதாக நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு

ஆர்.கே.நகர் தொகுதி மக்களை இழிவாக பேசியதாக நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக இளங்கோவன் என்பவர் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். #KamalHaasan #TTVDhinakaran
ஆர்.கே.நகர் மக்களை இழிவாக பேசியதாக நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு
Published on

ஆர்.கே.நகருக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் சுயேச்சையாக நின்ற டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக ஆளும் கட்சியான அதிமுகவும், எதிர்கட்சியான திமுகவும் இடம்பிடித்தன. பணநாயகம் வென்றதாக தினகரன் வெற்றி குறித்து எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தது. அரசியல் குறித்து கருத்து தெரிவித்து வந்த கமல்ஹாசனும் சமீப காலமாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். 

அமெரிக்காவில் விஸ்வரூபம்-2 படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிசியாக இருப்பதால் கமல் கருத்து தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து கமல் கருத்து தெரிவித்தார். அதில், ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் வாக்களிப்பதற்கு பணம் வாங்கியது திருடனிடம் பிச்சை எடுத்ததற்கு சமம் என்று நடிகர் கமல்ஹாசன் விமர்சனம் செய்து இருந்தார்.

ஆளும் தரப்பு ஆறாயிரம், யாருடைய தயவும் இன்றி சுயமாகவே வளர்ந்த சுயேச்சை தரப்பு இருபதாயிரம் என்று ஆர்.கே. நகரில் ஒவ்வொரு வாக்காளருக்கும் இரு தரப்பும் விலை நிர்ணயித்தனர்.

இருபதாயிரம் ரூபாய் அமவுண்டனுக்கான டோக்கனாக இருபது ரூபாய் நோட்டையே கொடுத்து ஜெயிச்சார் பார்யா? என்ற பார் புகழும் பாராட்டும் குறிப்பிடத்தக்கது எனவும் நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு அமைச்சர் ஜெயக்குமார், டி.டி.வி. தினகரன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் கமல்ஹாசன் ஆர்.கே. நகர் தொகுதி மக்களை விமர்சனம் செய்தது குறித்து கோவை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

கோவை கணபதி மணியக்காரன் பாளையத்தை சேர்ந்த டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் இளங்கோவன் கோவை ஜே.எம். எண்-2 கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு ராஜ் குமார் முன்னிலையில் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் 80 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இதனால் மக்களிடம் மதிப்பும், மரியாதையும் ஏற்பட்டு உள்ளது.

ஆனால் நடிகர் கமல்ஹாசன் திருடனிடம் பிச்சை எடுப்பது போன்ற ஒரு கேவலம் எங்கும் உண்டா என எனது கட்சிக்காரருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தெரிவித்து உள்ளார்.

இதனை பார்த்து எனது நண்பர்கள் என்னை கிண்டல் செய்கிறார்கள். இது மனவேதனை அளிக்கிறது. எனவே கமல்ஹாசன் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவு 500, 501-ன்படி தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

இந்த மனு வருகிற 12-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மாஜிஸ்திரேட்டு ராஜ்குமார் உத்தரவிட்டார்.

இளங்கோவன் ஏற்கனவே சிம்பு, அனீருத் மீது வழக்கு தொடர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #KamalHaasan #TTVDhinakaran 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com