

அங்கு அவர் பிறந்த வீடு தற்போது ஒரு பள்ளிக்கூடமாக இயங்கி வருகிறது. கவிஞர் வைரமுத்து அந்த பள்ளி வளாகத்தில் கே.பாலசந்தருக்கு சிலை அமைக்கிறார். வெண்கலத்தால் செய்யப்பட்ட பாலசந்தரின் மார்பளவு சிலையாக இது நிறுவப்படுகிறது. இந்த சிலையை அடுத்த மாதம் (ஜூலை) 9-ந்தேதி மாலை 5 மணிக்கு பாலசந்தரின் மனைவி ராஜம் பாலசந்தர் திறந்து வைக்கிறார்.
நடிகர் கமல்ஹாசன், டைரக்டர்கள் மணிரத்னம், வஸந்த், கவிஞர் வைரமுத்து உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். பாலசந்தருக்கு சிலை அமைப்பது குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“திரையுலகில் என்னால் மறக்க முடியாத ஒரு பேராளுமை இயக்குனர் பாலசந்தர். ஒரு மகனைப்போல் என்னை அவர் நேசித்தார். ஒரு தந்தையைப்போல் அவரை நான் நேசித்தேன். அரைத்த மாவையே அரைத்துக்கொண்டு இருந்த தமிழ் சினிமாவில் ஒரு மடைமாற்றத்தை ஏற்படுத்தியவர் அவர். சமூகத்தின் இருட்டின் மீது வெளிச்சம் பாய்ச்சி ஒரு கலாசார அதிர்ச்சியை ஏற்படுத்தியவர்.
தமிழ் சினிமாவிற்கு இந்திய முகம் கொடுத்தவர். அவர் படங்களைப்போலவே அவரும் மறக்கப்படக்கூடாதவர். அவர் படங்களில் வெற்றிப்படங்கள் தோல்விப் படங்கள் என்று தரம் பிரிக்க முடியாது. புரிந்து கொள்ளப்பட்டவை, புரிந்து கொள்ளப்படாதவை என்று மட்டுமே இனம் பிரிக்கலாம்.
அவருக்கு சிலை எடுப்பது என்பது அவருக்கு நான் செலுத்தும் நன்றி மட்டுமல்ல முன்னோடிகளை மதிக்கும் ஒரு கலாசாரமாகும். இந்த பணியை என் வாழ்வின் கடமைகளுள் ஒன்று என்று கருதுகிறேன்.”