

பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான், சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்து வருகிறார். அவருக்கு மராட்டிய மாநில கடலோரத்தில் பல பண்ணை வீடுகள் சொந்தமாக உள்ளது.
அலிபக் எனும் கடலோரப் பகுதியில் உள்ள ஷாருக்கானின் பண்ணை வீடு மிகப்பிரமாண்டமானது. சுமார் 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த பண்ணை வீட்டில் அனைத்து நவீன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த பண்ணை வீட்டின் மதிப்பு சுமார் 250 கோடி ரூபாயாகும். ஆனால் இந்த பண்ணை வீட்டை வேறு ஒருவரது பெயரில் நிர்வகித்து வந்தார். இதைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரித்து வந்தனர்.
அந்த பண்ணை வீட்டுக்கு உரிய அனுமதிகளை ஷாருக்கான் பெறாதது விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து வருமான வரித்துறை சட்டம் பிரிவு 24ன் கீழ் நடவடிக்கை எடுத்து அந்த பண்ணை வீட்டை முடக்கினார்கள்.
தற்போது அந்த பண்ணை வீடு பினாமி சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஷாருக்கான் தனது பெயரில் அந்த பங்களாவை வாங்காமல் வேறு நிறுவனம் பெயரில் வாங்கியதை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து வருமான வரித்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
நடிகர் ஷாருக்கான் நிறைய விவசாயிகளிடம் இருந்து நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி அந்த பண்ணை வீட்டை பல கோடி ரூபாயை செலவு செய்து கட்டி இருந்தார். வெளிநாடுகளில் இருந்து பொருட்களை வாங்கி வந்து உள் அலங்காரம் செய்து இருந்தார்.
அதிநவீன வசதிகள் கொண்ட அந்த பண்ணை வீட்டில் 2 நீச்சல் குளங்கள் உள்ளன. ஹெலிகாப்டர் தரை இறங்கும் வசதியும் அந்த பண்ணை வீட்டில் செய்யப்பட்டுள்ளது.
பல வசதிகள் அரசிடம் முறைப்படி அனுமதி பெறாமலே செய்யப்பட்டுள்ளது. அப்போது தான் இந்த பண்ணை வீட்டை முறை கேடாக ஷாருக்கான் கட்டி இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.