

எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ஜனநாயகன்’. கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வர இருந்த இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் படம் திரைக்கு வருவதில் இழுபறி நீடித்து வருகிறது. இது ஒருபுறமிருக்க ‘ஜனநாயகன்’ படம் ஆன்லைனில் கசிந்ததால் பலரும் கைதாகி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனிடையே, விஜய் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே.நாராயணா சில தினங்களுக்கு முன்பு கூறுகையில், ‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வருவதற்காக காத்திருக்கிறோம். விரைவில் கிடைத்து விடும் என நம்புகிறோம். எவ்வளவு சீக்கிரம் படத்தை வெளியிட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ‘ஜனநாயகன்’ படத்தை வெளியிடுவோம் என்று கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து ‘ஜனநாயகன்’ படம் வெளியீட்டு தேதி குறித்த உறுதிப்படுப்படாத தகவல்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. இதற்கிடையே, விஜய் பிறந்தநாள் வருகிற 22-ந்தேதி கொண்டாடப்பட உள்ளதையொட்டி விஜயின் ‘ஜில்லா’, ‘மெர்சல்’ ஆகிய படங்கள் மீண்டும் வெளியாக உள்ளது. ஆனால் ‘ஜனநாயகன்’ படம் குறித்து உறுதியான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், இன்று 'Jananayagan' சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது. ஒரு முதலமைச்சரின் படத்திற்கே இந்த நிலைமை என்றும் படத்த எப்போ சார் ரிலீஸ் பண்ணுவீங்க... என்றும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.