தமிழ் தெரியாது என்பது பெருமையல்ல அவமானம்!-தான் படித்த பள்ளியில் புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்து நடிகர் தனுஷ் உருக்கம்!

சில ஆண்டுகளுக்கு முன்பு பெல்ஜியத்தில் பிரெஞ்சு படப்பிடிப்பின் போது, எனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதைக் கேட்டு அங்குள்ளவர்கள் வியந்தனர்.
Actor Dhanush
Published on

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 3 தளங்களைக் கொண்ட புதிய கட்டிடத் திறப்பு விழா நடைபெற்றது. தான் எல்.கே.ஜி முதல் 10-ஆம் வகுப்பு வரை படித்த பள்ளிக்குத் தேவையான உள்கட்டமைப்புகளைத் தன் சொந்தச் செலவில் கட்டித் தந்த நடிகர் தனுஷ், 'தனுஷ் பிளாக்' எனும் அக்கட்டிடத்தை நேரில் திறந்து வைத்தார்.

விழாவில் தனது பழைய ஆசிரியர்களின் கால்களில் விழுந்து ஆசி பெற்ற தனுஷ், ஆசிரியர்கள், சக வகுப்புத் தோழர்கள் மற்றும் மாணவர்களிடையே உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார்:

தாய்மொழி பற்றிய பேச்சு

"நான் இங்கு படித்த காலத்தில் ஆங்கிலம் சரியாக பேச வராது, தவறுகளுடனே பேசுவோம். ஆனால் எங்களுக்குத் தமிழ் நன்றாகத் தெரியும். இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. நான் சந்திக்கும் 10 பேரில் 8 பேருக்குத் தமிழ் எழுத, படிக்கத் தெரியவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் புலமை பெற்றுள்ளனர். இது மிகவும் மனவேதனை அளிக்கிறது" எனக் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு அனுபவம்

சில ஆண்டுகளுக்கு முன்பு பெல்ஜியத்தில் பிரெஞ்சு படப்பிடிப்பின் போது, எனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதைக் கேட்டு அங்குள்ளவர்கள் வியந்தனர். காரணம் கேட்டதற்கு, 'தாய்மொழி தெரிந்திருப்பதுதான் முதன்மை. ஆங்கிலம் என்பது கூடுதல் தகுதி மட்டுமே' என்றனர். அந்த சம்பவம் மொழி பற்றிய என் பார்வையையே மாற்றியது.

உருக்கமான வேண்டுகோள்

"தாய்ப்பால் போன்ற தாய்மொழியை விடுத்து பிற மொழிகளுக்கு முக்கியத்துவம் தருவது தவறானது. தமிழ் தெரியாது என்று சொல்வது பெருமையல்ல; அது உண்மையில் அவமானம். மாணவர்கள் அனைவரும் முதலில் தாய்மொழியைப் படிக்கவும் எழுதவும் கற்றுக் கொள்ள வேண்டும்" என வலியுறுத்தினார்.

பள்ளிக்குத் தொடரும் ஆதரவு:

நடிகரும் தனுஷின் பள்ளித் தோழருமான ஒளிப்பதிவாளர் ஏ.குமரன் பேசுகையில், பள்ளியின் உள்கட்டமைப்புத் தேவையை அறிந்து தனுஷ் முன்வந்து நிதியுதவி செய்ததாகவும், வரும் காலங்களில் பழமையான கட்டிடங்களைச் சீரமைத்து மேலும் புதிய வசதிகளைச் செய்து தருவதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார். மாணவர்களும் எதிர்காலத்தில் தான் படித்த கல்வி நிறுவனங்களுக்குப் பங்களிப்பு செய்ய வேண்டும் எனத் தனுஷ் கேட்டுக்கொண்டார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com