

‘அரசன்’ பட இயக்குநர் வெற்றிமாறன் தற்போது ‘ராஜன்வகையறா’ படப்பிடிப்புப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதால், குறித்த தேதியில் ‘அரசன்’ படத்தை வெளியிட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘அரசன்’ படத்தை தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக படப்பிடிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
‘அரசன்’ படத்தில் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா ஜெரமியா, அமீர், கிஷோர், விக்ராந்த், யோகலட்சுமி, யோகி பாபு, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் முக்கிய காட்சிகள் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக கடந்த மாதம் நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து ‘அரசன்’ படத்தின் 4-ம் கட்ட படப்பிடிப்பு பணிகள் விரைவில் சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இக்கட்ட படப்பிடிப்பின்போது விஜய்சேதுபதி, அமரா, ஆண்ட்ரியா ஆகியோர் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.
விஜய் சேதுபதி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். அந்தப் படப்பிடிப்பை முடித்த பிறகு, அவர் மீண்டும் 'அரசன்' படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.
இதற்கிடையில், இயக்குநர் வெற்றிமாறன் தற்போது ‘ராஜன்வகையறா’ படப்பிடிப்புப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
இதனால் 'அரசன்' படத்தை ஆரம்பத்தில் தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.