

தியானம் மற்றும் ஆன்மிகம் குறித்த பல புதிய தேடல்களையும், வாழ்க்கை தத்துவங்களையும் தான் அறிந்து வருவதாக ராஷி கண்ணா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ படங்களின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த் டாக்டராக நடித்து வருகிறார். இவருடன் சிம்ரன், ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை நடிகை ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாகப் பகிர்ந்துள்ளார்.
படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிகாந்தும், ராஷி கண்ணாவும் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே ஆன்மிகம் மற்றும் தியானம் குறித்த உரையாடல் எழுந்துள்ளது.
அந்தச் சமயத்தில் ரஜினிகாந்த், ராஷி கண்ணாவிடம், "Living with the Himalayan Masters" என்ற ஆன்மிகப் புத்தகத்தைப் படித்திருக்கிறாயா? என்று கேட்டுள்ளார். அதற்கு ராஷி கண்ணா "இல்லை" என்று பதிலளித்துள்ளார்.
அடுத்த இரண்டு நாட்களில், ராஷி கண்ணாவுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில், அந்தப் புத்தகத்தின் புதிய பிரதியொன்றை வாங்கி, அதில் தனது கையெழுத்திட்டு ராஷி கண்ணாவுக்குப் பரிசாக வழங்கியுள்ளார் ரஜினிகாந்த்.
புத்தகத்தைப் பரிசளித்ததுடன் நிறுத்தாமல், "இந்தப் புத்தகத்தை முழுமையாகப் படியுங்கள். இதைப் பற்றிப் பின்னர் உங்களிடம் சில கேள்விகளைக் கேட்பேன்" என்றும் ரஜினிகாந்த் அன்போடு கூறியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்ன வார்த்தைக்காக, கடந்த சில வாரங்களாக ராஷி கண்ணா அந்தப் புத்தகத்தைத் தீவிரமாகப் படித்து வருகிறார். இதன் மூலம் தியானம் மற்றும் ஆன்மிகம் குறித்த பல புதிய தேடல்களையும், வாழ்க்கை தத்துவங்களையும் தான் அறிந்து வருவதாக ராஷி கண்ணா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.