

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருந்து தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். கட்சி ஆரம்பித்து சந்தித்த முதல் தேர்தலிலேயே அதிக இடங்களில் வென்று முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் பாராட்டினர்.
இதனிடையே, திரைப்பிரபலங்கள் பலரும் முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அப்போது முதலமைச்சருடனான சந்திப்பின் போது எடுத்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் ஜெய் முதலமைச்சர் விஜயை சந்தித்து பேசியுள்ளார். சந்திப்பின்போது எடுத்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு நெகிழ்ச்சியான தருணத்தையும் பகிர்ந்துள்ளார்.
விஜய்யின் 'ஜன நாயகன்' உலகெங்கும் திரையரங்குகளில் வெளியான மறுநாள் (அதாவது நேற்று) நடிகர் ஜெய், தமிழக முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன் ஒரு செடியை முதலமைச்சருக்கு பரிசாக அளித்தார்.
சந்திப்பு குறித்து நடிகர் ஜெய் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
"நல்ல விஷயங்கள் நடக்க நேரம் எடுக்கும்... சிறந்த விஷயங்கள் தங்களின் நேரத்தைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும்..." என்று நடிகர் ஜெய் பதிவிட்டுள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவாக நடிகர் ஜெய் பிரசாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.