

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு முதல் நிகழ்ந்து கொண்டிருக்கும் விவசாயிகள் சாவுகளையும் விவசாயத்துக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல்களையும் விரிவாக கூறும் ஆவணபடம் ‘கொலை விளையும் நிலம்’. 50 நிமிடங்கள் ஓடிய இந்த ஆவணப்படம் பார்த்தவர்களை கண்கலங்க வைத்தது.
விழாவில் இயக்குனர் சீனு ராமசாமி பேசியதாவது:-
‘இந்தக் காட்சிகளுக்கு முன்பாக எனக்கு பேச்சே வரவில்லை. உலக அரங்கில் இந்தியாவுக்கு விவசாய நாடு என்ற அடையாளம் தான் இருக்கிறது. அந்த விவசாயத்துக்கு அடிப்படையே விவசாயிகள் தான். அவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு தற்கொலை செய்யும் நிலைக்கு ஆளாவது பெரிய அவலம்.
இந்த நாட்டில் ஒரு பல்பு தயாரிப்பவனுக்கு கூட தான் உற்பத்தி செய்யும் பொருளுக்கு தானே விலை நிர்ணயம் செய்ய முடிகிறது. ஆனால் உணவு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளால் தங்கள் விளைபொருளுக்கு விலை நிர்ணயிக்க முடியவில்லை. இடைதரகர்கள் தான் விவசாயி உற்பத்தி செய்யும் பொருளுக்கு விலை நிர்ணயம் செய்கிறார்கள். இப்போதாவது நாம் விழித்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆவணபடத்திற்கு இசை அமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் பேசியதாவது:-
‘இது மிக முக்கியமான பதிவு. இதில் என்னுடைய பங்களிப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்படி ஒரு முயற்சி எடுத்ததற்காகவே இயக்குநர் க.ராஜீவ் காந்திக்கும் கவிதாவுக்கும் பாராட்டுகள். பத்திரிகையாளர்கள் இதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இதில் என்னை சேர்த்துக் கொண்டதற்கு நன்றி. வலிமையாகவும் ஆழமாகவும் வரிகளைத் தந்த இயக்குநர் ராஜு முருகனுக்கு நன்றிகள்.
விஜய் சேதுபதி பேசுகையில்,
‘என்னை கண்கலங்க வைத்த ராஜீவ்காந்திக்கு மரியாதை கலந்த வணக்கம். இந்த ஆவணப்படம் என்னை பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வீடுகளுக்கே என்னை அழைத்து சென்று உட்கார வைத்தது. அழுதுவிட்டேன். இது யாரால் நடக்கிறது எதனால் நடக்கிறது என்று வெகுநாட்களாகவே பேசிக் கொண்டு இருக்கிறோம்.
ஆனால் நாம் போராடுவதும் போராடும் முறைகளும் எட்ட வேண்டிய காதுகளுக்கு பழகிவிட்டது என்று நினைக்கிறேன். எதோ தினமும் காலையில் டிபன் சாப்பிடுவது போல வழக்கமான ஒன்றாகிவிட்டது என நினைக்கிறேன். இந்த ஆவணப்படம் இன்னும் சிறிது குறைக்கப்பட்டு பெருவாரியான மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
போராடும் முறைகளிலும் புதிய மாற்றங்கள் வேண்டும். ஆட்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நம் நிலைமை மாறவில்லை. போராட்டங்களை முன்னெடுக்கும் தலைவர்கள் இந்த போராட்டங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வதை பற்றியும் வேறு போராட்ட வழிமுறைகளையும் சிந்திக்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
மரணம் பிறர் வீட்டுக் கதவைத் தட்டும்போது கண்டு கொள்ளாமல் தான் இருப்பார்கள். ஆனால் அது நம் வீட்டுக் கதவை தட்டும் போது தான் அய்யோ அம்மா என்று அடித்துக்கொண்டு அலறுவார்கள். அதுவரை காத்திருக்காமல் இந்த ஆவணப்படம் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும்’ என்றார்.