மேஷம்- 2026 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்

எந்த வைத்தியத்திற்கும் கட்டுப்படாத நோய் தாக்கம் இருந்தவர்களுக்கு நோயிலிருந்து விடுபடும் மார்க்கம் தென்படும்.
Mesham
Published on

செவ்வாயின் ஆசி பெற்ற மேஷ ராசி வாசகர்களே

தற்போது மேஷ ராசிக்கு 12ம் இடமான அயன சயன போக விரய ஸ்தானத்தில் நின்று ஏழரை சனியாக பலன் வழங்கிய சனி பகவான் 27.7.2026 முதல் 10.12.2026 வரை வக்ரகதியில் சஞ்சரிக்கப் போகிறார். மேஷ ராசிக்கு 10,11ம் அதிபதியான சனி பகவான் வக்ரமடைவதால் ஏழரைச் சனியின் ஆதிக்கம் வெகுவாக குறையும். இதுவரை இருந்த மனக்கவலை, உடல் நலக் குறைவு, கடன் தொல்லை, தொழில் தடை, அதிர்ஷ்டமின்மை விலகும். இது நாள் வரை உங்களை ஆட்டிப்படைத்த இனம் புரியாத மன சஞ்சலம் விலகும். இந்த காலகட்டத்தில் ஆன்மீக பயணம், வெளிநாட்டு குடியுரிமை பெறுவதில் ஆர்வம் கூடும். வீண் விரயம், வைத்தியச் செலவுகள் குறையும். அறுவை சிகிச்சை வரை சென்ற கை, கால், மூட்டு வலி பிரச்சனைகள் தாமாக சீராகும்.

எந்த வைத்தியத்திற்கும் கட்டுப்படாத நோய் தாக்கம் இருந்தவர்களுக்கு நோயிலிருந்து விடுபடும் மார்க்கம் தென்படும். இதுவரை நீங்கள் பெற்ற கடனை அடைக்க முடியாமல் திணறி கடன்காரர்களுக்கு பயந்து ஒளிந்து வாழ்ந்த நிலைமாறும். கடன் பெறுவதற்காக வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை அணுகி அலுத்துப் போன உங்களுக்கு கடன் தர நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தேடி வரும் காலம் இது. வீட்டின் சுப நிகழ்வுகளை நடத்த, தொழில் விரிவாக்க கடன், ஹவுசிங் லோன், பெர்சனல் லோன் என விரும்பிய கடன் தொகை கிடைக்கும். மீட்டர் வட்டி, கந்து வட்டி போடும் நிதி நிறுவனங்களிடம் கடன் பெறாமல் வங்கிகளில் கடன் பெறுவது பாதுகாப்பானதாகும். தந்தை, தந்தை வழி உறவுகளை அனுசரித்து செல்ல வேண்டிய காலம். காரணமற்ற இடப்பெயர்ச்சியால் தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட அலைச்சல், அலுப்புகள் குறையும்.

சனிபகவான் ரேவதி நட்சத்திர சாரத்தில் வக்ரகதியில் சஞ்சரிக்கும் காலம் (27.7.2026 முதல் 9.10.2026 வரை)

மேஷ ராசிக்கு 3 6ம் அதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் வக்கிரகதியில் சஞ்சரிக்கும் காலம் பணிச்சுமை அதிகமாகும். உழைப்பவர் நீங்களாக இருந்தால் நல்ல பெயர் எடுப்பது சக ஊழியராக இருப்பார்கள். வரவை விட செலவு அதிக–மாகும். பிறருக்கு ஜாமீன் போடக்கூடாது. கடன் சார்ந்த விஷயங்–களில் கவனம் தேவை. உத்தியோக மாற்றம் செய்வதை தவிர்க்கவும். குடும்பத்–தில் காரணமின்றி நடந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்ப உறவுகளிடம் ஒற்றுமை மேலோங்கும். பிரிந்து சென்ற உறவுகளின் வருகை புத்துணர்வு தரும். மனதை மகிழ்விக்கும் ஆடம்பர விருந்து உபச்சாரங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டும். கண் பார்வைக் குறைபாட்டைச் சரி செய்யும் சந்தர்ப்பம் கிடைக்கும். பால்ய வயது குழந்தைகளுக்கு பேச்சில் இருந்த குறைபாடு அகலும். தனவரவு மட்டற்ற மகிழ்ச்சி யைத் தரும். பணத்திற்கு பஞ்சம் இருக்காது. சேமிப்புகளும், முதலீடுகளும் அதிகரிக்கும். பங்குச்சந்தை முதலீட்டில் ஆர்வம் அதிகரிக்கும். குரு உங்களின் சொத்து தொடர்பான விஷயத்தை சாதகமாக்கித்தர தயராக இருந்தாலும் சனிபகவான் சில தடை தாமதங்களையும் தருவார். உங்களின் சொத்துக்கள் தொடர்பான சர்ச்சைகள் நீண்ட இழுவைக்குப் பிறகு முடிவுக்கு வரும்.

சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரகதியில் சஞ்சரிக்கும் காலம் (10.10.2026 முதல் 10.12.2026 வரை)

மேஷ ராசிக்கு 10,11ம் அதிபதியான சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரமடையும் இந்த காலகட்டம் மன சஞ்சலத்தில் இருக்கும் உங்களுக்கு இந்த வக்ர காலம் மாற்றத்தையும் ஏற்றத்தையும் தரும் விதமாகவே இருக்கும். இது வரை நீங்கள் செய்து வந்த தர்மம் உங்களை காக்கும் நேரம் வந்துவிட்டது. உழைப்பும் முயற்சியும் உங்களுக்கு வெற்றியை தரும். தொழில் சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.செய்யும் வேலையை சீரும் சிறப்புமாக செய்வீர்கள்.செய்யும் தொழிலே தெய்வம் என்ற சிந்தனை இருக்கும்.தொழில் ரீதியான புதிய நட்பு வட்டாரங்கள் கிடைக்கும். உயரிய சிந்தனை, செயல்திறன் இருக்கும்.புதிய தொழில் தொடங்குவதற்காவும், புதிய தொழிலை கற்றுக்கொள்ளவும் வெளியூர், வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள நேரும்.வியாபாரத்தை முறையாக திட்டமிட்டு முழுமையாக செயல்படுத்தி வெற்றிக்கனியை சுவைப்பீர்கள். பொருளாதாரத்தில் சீரான சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தை தேடி அலைந்த கொண்டிருந்த உங்களுக்கு திறமை,முயற்சி,பொறுமை, உழைப்பு ஆகியவற்றுடன் உங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும்.

திருமணம்

திருமணத்தடை அகலும். முறையில்லாமல் நடக்கவிருந்த திருமணம் வீட்டுப் பெரியோர்களின் நல்லாசியால் சீரோடும்,சிறப்போடும் நடக்கும்.எதிர்மறை எண்ணம் அகலும்.ஆத்ம ஞானம் கிடைக்கும். தவறான காதலில் சிக்கி மீள முடியாமல் தவித்த மேஷ ராசியினரின் காதல் பிரச்சனை முடிவுக்கு வரும்.

பெண்கள்

புதிய பெண் தொழில் முனை வோர்கள் உருவாகுவார்கள். புகுந்த வீட்டினர் ஆதரவும், லாபங்களும் கிடைக்கும். பிள்ளைகளின் திருமணம், வளைகாப்பு, பூப்புநன் நீராட்டு விழா என ஏதாவது மங்கல நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும்.குடும்ப பிரச்சனையை மூன்றாம் நபர்களிடம் பகிரக் கூடாது.உலகம் செல்போன் மயமாகி விட்டதால் குழந்தை உங்களின் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது.கணவரின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.பல வருடங்களாக அச்சுறுத்தி வந்த மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும்.சுக போக யோகம் கிட்டும். கால்நடை மற்றும் உயிரின வளர்ப்பில் ஆர்வம் உருவாகும்.

முதலீட்டாளர்கள்

கம்பீரமும், தைரியமும் நிறைந்த நீங்கள் தொழிலை தொடர்ந்து நடத்த முடியுமா? என்ற சந்தேகத்துடன் நாட்களை நகர்த்தச் செய்துவிட்டது. கமிஷன், தரகு போன்றவற்றின் மூலம் கணிசமான தொகை கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழில் புரிவர்கள் எதற்கும் பயன்படாத நிலத்தைக் கூட விற்று சாம்பாதித்து காலிநிலம் , வீட்டு மனை வாங்கி போடுவார்கள். பிறருக்கு செய்த உதவி, நன்மைகளே உங்களுக்கு எதிராகத் திரும்பும். உறவுகள் மற்றும் நண்பர்களுடன் சற்று நெருக்கமாக பழகுவதை தவிர்ப்பது நல்லது. உரிய தொழில் வரியை முறையாக செலுத்த வேண்டும்.

உத்தியோகஸ்தர்கள்

இதுவரை வேலையின்மையால் அவதிப்பட்டவர்–களுக்கு அரசு, தனியார் துறையில் விரும்பிய வேலை கிடைக்கும். உத்தியோக உயர்வை எதிர் பார்த்தவர்களுக்கு விரும்பிய பதவி உயர்வு, ஊதிய உயர்வு, அரியர்ஸ் சம்பளம் கிடைக்கும்.உடன்வேலை பார்த்தவர்களால் ஏற்பட்ட பிரச்சனை, கெளரவக் குறைவு போன்ற பிரச்சனைகள் அகலும்.

அரசியல்வாதிகள்

பொய்யான கெட்ட வதந்திகளால் ஏற்பட்ட அவமானம் அகலும். இதுவரை வெளியில் சொல்ல முடியாத அவமானத்தால் மனம் நொந்தவர்களுக்கு அதிலிருந்து விடுபடுவார்கள். மனதை வருத்திய கோர்ட், கேஸ் பிரச்சனை தீரும்.சமூக அந்தஸ்து உயரப் போகிறது. இதுவரை உங்களை ஏளனம் செய்தவர்கள் உங்களை பார்த்தவுடன் மரியாதையாக எழுந்து நிற்பார்கள்.

பரிகாரம்

அடிப்படை தேவைகளான உணவு, உடை இருப்பிடமின்றி மிகுந்த வறுமை நிலையில் இருப்பவர்கள் எறும்பு புற்றுக்கு சர்க்கரை நொய் அரிசி இட்டு வர பொருளாதார குற்றம் நீங்கும். கண் திருஷ்டி, செய்வினைக் கோளாறு, தீராத கடன், நோய், பகை இருப்பவர்கள் தினமும் மாலை 4.30 முதல் ஆறு மணி வரையிலான பிரதோஷ வேளையில் லஷ்மி நரசிம்மரை வழிபட நல்ல மாற்றம் தெரியும். வக்ர கால பாதிப்புகள் குறைய செவ்வாய் கிழமை சிவப்பு துவரை தானம் வழங்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com