கும்பம்- 2026 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்

நாளைய வருமானத்திற்குரிய தொகை இன்றே செலவாகிவிடும்.
Kumbam
Published on

சனி பகவானின் ஆசி பெற்ற கும்ப ராசியினரே

கும்ப ராசியின் அதிபதி மற்றும் விரயாதிபதியான சனி பகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் தனது 27.7.2026 முதல் 10.12.2026 வரையில் வக்ர கதியில் சஞ்சரிக்கப் போகிறார். சிலர் தொழில், வேலைக்காக வெளியூர், வெளிநாடு செல்ல நேரலாம். சிலருக்கு குறுக்கு வழியில் சம்பாதிக்கும் எண்ணம் தோன்றும். அரசியல் நாட்டம் மிகும். புத்திர பாக்கியத்தில் நிலவிய தடை, தாமதங்கள் விலகும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை அதிகரிக்கும். பங்குச் சந்தையில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அதிர்ஷ்டம் சற்று குறைவுபடும். ஆரோக்கியத்தை அதிகரிக்க மாற்று முறை வைத்தியத்தை நாடுவீர்கள். கடனிலிருந்து மீளக் கூடிய வாய்ப்புகள் தேடி வரும். வீண் விரயங்கள் இழப்புகள் நஷ்டங்கள் குறையும். எதிரிகளின் நெருக்கடி மெல்ல மெல்ல விலக ஆரம்பிக்கும். புதிய நட்பு வட்டாரங்கள் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல்கள் நிலவும். எதிர்பாராத சுபச் செலவு உண்டாகும். வழக்குகள் இழுபறியாகும். சனி பகவான் நியாயமாக உழைப்பவர்களுக்கு உறுதுணையாகவே இருப்பார் என்பதால் கலங்க வேண்டாம். சோதனை காலத்தை எப்படி சாதனை காலமாக மாற்ற முடியும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

சனிபகவான்

அலைச்சல் மற்றும் விரயம் மிகுதியாக இருக்கும். பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இழப்புகள் எந்த நேரத்தில் எப்படி வரும் என்று யூகம் செய்ய முடியாது. எதையாவது உருட்டி பிரட்டி முக்கிய தேவைக்கு பணத்தை ஏற்பாடு செய்தால் தவிர்க்க முடியாத வேறு புதிய செலவு வந்து விடும். நாளைய வருமானத்திற்குரிய தொகை இன்றே செலவாகிவிடும். உறவுகள் உங்களை விட்டு விலகும்.

மனிதனின் சட்டைப்பையில் பணம் இல்லை என்றால் முதலில் விலகுவது உறவுகளே. யார் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள் என்று நினைத்தீர்களோ அவர்கள் பாதகத்தை தருவார்கள். அவசரமான சூழ்நிலையிலும் உடனிருந்து உதவும் உறவுகளை அடையாளம் காண்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த வழக்கு பாதகமாகும். சனிபகவான் ரேவதி நட்சத்திர சாரத்தில் வக்ரகதியில் சஞ்சரிக்கும் காலம் (27.7.2026 முதல் 9.10.2026 வரை) கும்ப ராசிக்கு 5,8ம் புதனின் ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் வக்கிரம் அடையும் காலம் சிலர் வீடு மாற்றிச் செல்வார்கள். ஒரு சிலருக்கு பூர்வீகச் சொத்தில் பாகப் பிரிவினை நடக்கும். பிரிவினையில் உங்களுக்கு விரும்பமில்லாத சொத்து வரும் அல்லது வாஸ்துக் குறைபாடு உள்ள சொத்து அல்லது விருத்தியில்லாத மனை வந்து சேரும். ஒரு சிலருக்கு சொத்து கை விட்டுப் போகும். வாகனங்கள் பழுதாகி ரிப்பேர் செலவு வைக்கும். குடியிருக்கும் வீட்டை பழுது நீக்கம் செய்ய போட்ட பட்ஜெட் கையைப் பிடிக்கும்.தாய் வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. தேவையில்லாமல் யாரையும் பகைக்கக் கூடாது.

கடன்

மறைமுக எதிரிகள் உருவாகுவார்கள். உங்கள் பேச்சே பல பகைக்கு காரணமாகும். நெருக்கமான நண்பரே உங்களுக்கு எதிரியாகுவார். கடன் கொடுக்க நிதி நிறுவனங்கள் அணிவகுத்து வாசல் கதவை தட்டும். புதுக் கடன் வாங்கி பழைய கடனை அடைக்க நேரும். அல்லது வியாபாரத்தை சீராக்க கடன் பெறலாம். கடன் பெறுவதற்கு முன்பு பல முறை யோசித்து தேவைக்கு மட்டுமே வாங்க வேண்டும். அரசின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிடமிருந்து மட்டுமே பணம் பெற வேண்டும். மீட்டர் வட்டி கந்து வட்டி வாங்கி இருக்கும் நிம்மதியையும் இழக்கக் கூடாது.

சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரகதியில் சஞ்சரிக்கும் காலம் (10.10.2026 முதல் 10.12.2026 வரை) தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதியில் சனிபகவான் வக்கிரமடையும் காலம்மரணத்திற்கு சமமான கண்டங்கள் கூட நிவர்த்தியாகும். விலை உயர்ந்த பொருட்கள் திருடு போகும் வாய்ப்பு இருப்பதால் பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.

வீடு, நிலம் போன்றவற்றை வாங்கும் போது வில்லங்க சர்டிபிகேட்டை சரி பார்ப்பது அவசியம்.தவறான பத்திரப்பதிவு அதனால் வில்லங்கம் உருவாகலாம். ஜனன கால ஜாதகத்தில் வலிமையான சாதகமான தசா, புத்தி நடந்தால் சிறிய பாதிப்பாக முடிந்து விடும். எந்த பாதிப்பும் ஏற்படாது.ஜனன கால ஜாதகத்தில் சாதகமான தசா புக்தி நடந்தால் திடீர் அதிர்ஷ்டம், புதையல் யோகம், எதிர்பாராத பணம் வராக்கடன் வசூலாகும்.எட்டாமிடம் வலுப்பெறுவதால் வெளிநாட்டு வேலை கிடைக்கும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு ஏழரைச் சனியால் எந்த பாதிப்பும் ஏற்படாது. நண்பர்களால் ஆதாயம் உண்டு. நீண்ட நாட்களாக தொடர்பில்லாத பள்ளி, கல்லுரி மற்றும் அக்கம் பக்க பால்ய நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியைத் தரும். தொழில் கூட்டாளிகளிடையே நல்லிணக்கம். நீடிக்கும் அதிகரிக்கும். தம்பதிகளிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு மாறும். கணவன் மனைவியிடையே புரிதல் ஏற்படும்.

திருமணம்

ராசியில் ராகுவும் ஏழாம் இடத்தில் கேதுவும் உள்ளது கோச்சார ரீதியான சர்ப்ப தோஷத்தை மிகைப்படுத்தும். எனினும் ராசி அதிபதிக்கு குரு பார்வை இருப்பதால் திருமணத் தடை அகலும். நீண்ட நாட்களாக ஏதாவது காரணம் கூறி திருமணத்திற்கு கால தாமதம் செய்தவர்கள் கூட திருமணத்திற்கு சம்மதிப்பார்கள்.சிலரின் வாழ்க்கை துணைக்கு அரசு வேலை கிடைக்கும். காதல் திருமணமும் கைகூடும். பெண்கள்- பெண்கள் தங்க நகைகளை பத்திரமாக கையாள வேண்டும் 40 வயதை கடந்த பெண்களுக்கு கால் வலி, மூட்டு வலி மற்றும் எலும்பு தொடர்பான பிரச்சனைகள் மிகுதியாக இருக்கும். சிலர் வலி தாளாமல் பல மருத்துவரை சந்திப்பார்கள்.சிலர் அறுவை சிகிச்சை வரை செல்வார்கள். ராகு/கேது,சனி தசை, புக்தி நடப்பில் இல்லாதவர்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படாது. சுண்டைக்காயை வறுத்து பொடியாக அரைத்து உணவில் சேர்த்து வர வலி குறையும். வலி உள்ள இடங்களில் சுத்தமான நல்லெண்ணெய் தடவி வர நல்ல மாற்றம் தெரியும்.

முதலீட்டாளர்கள்

சிந்தனைகள் பெருகும். எவராலும் சாதிக்க முடியாத செயல்களை செய்து முடிப்பீர்கள். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள்.கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்திற்கு தற்போது பலன் கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் மூலம் தொழில், வியாபாரம் விரிவடையும்.கடன் தொல்லை குறையும். வியாபாரம் பெருகி, இலாபம் கூடும். சேமிப்பு உயரும்.ஒப்பந்த அடிப்படையிலான புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த தடை தாமதம் விலகும்.

உத்தியோகஸ்தர்கள்- ஏழரைச் சனி மற்றும் ஆறாமிட குரு உங்களை வழி நடத்துவதால் உயரதிகாரிகளிடம் பிரச்சனை வரும் என்பதால் அனுசரித்துச் செல்ல வேண்டும். உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள். எதிர்பார்த்த வேலை கிடைக்காது. மிகக் குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்க்கும் நிலை இருக்கும் அரசு உத்தியோகத்திற்கு முயற்சி செய்பவர்கள் தவறானவர்களை நம்பி அதிக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். அரசு அதிகாரிகள் லஞ்ச வழக்கில் மாட்டும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

அரசியல்வாதிகள்

பலமான பின்னணி இல்லாதவர்கள்அ ரசியலே வேண்டாம் என்று விட்டு ஒதுங்கும் காலம். ஜான் ஏறினால் முழம் சறுக்கும்.எதிர் கட்சியினரின் குற்றச் சாட்டுகளுக்கு பதில் சொல்ல முடியாது. எதிர்கட்சியினரின் ஆதிக்கம் மிகுதியாக இருக்கும்.நித்திய கண்டம் பூரண ஆயுள் என மாளாத பிரச்சனைகள் துரத்தும். கோட்சாரம் சரியில்லாத இந்த காலகட்டத்தில் சித்தர் பீடங்களுக்கு சென்று வழிபட ஆன்ம பலம் அதிகரித்து எதையும் சந்திக்கும் மனோதைரியம் உருவாகும்.

பரிகாரம்

சனிக்கிழமை சிவ வழிபாடு செய்யவும். நவதானிய அடை தோசையில் நல்லெண்ணெய் விட்டு சாப்பிட மாற்றமும் ஏற்றமும் தேடி வரும். விநாயகரை செவ்வாய்க்கிழமை காலை 8-9க்குள் அருகம்புல் வைத்து 27 வாரம் வழிபட சுப பலன் கிடைக்கும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com