search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்தியில் ராகுல் காந்தி பிரதமராக அமர வேண்டும்- விஜய் வசந்த் பிரசாரம்
    X

    மத்தியில் ராகுல் காந்தி பிரதமராக அமர வேண்டும்- விஜய் வசந்த் பிரசாரம்

    • மலைவாழ் மக்களின் வசதிக்காக பஸ் மற்றும் மின்சார வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.
    • ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பள்ளிக்கூடங்கள் அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

    நாகர்கோவில்:

    இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் காலை விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். பழங்குடியின மக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கக்கூடிய கற்றுவா, பத்துகாணி, ஆறுகாணி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோர் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

    இந்த பிரசாரத்தில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பினுலால் சிங், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது மலைவாழ் மக்கள் மத்தியில் பேசிய வேட்பாளர் விஜய் வசந்த் கூறியதாவது:-

    மத்தியில் மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் பா.ஜனதா அரசை விரட்டியடிக்க நீங்கள் அனைவரும் எங்கள் இருவருக்கும் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். பழங்குடியின மக்கள் வாழக்கூடிய மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் மீது அங்கு ஆளும் பா.ஜனதா அரசு கலவரங்களை ஏற்படுத்தி தாக்குதல் நடத்தியது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

    மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் சொல்ல முடியாத சித்ரவதைகளுக்கு ஆளாகினர். இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து வந்து அதை வீடியோவாக வெளியிட்ட அவல நிலை பா.ஜனதா ஆளுகிற மாநிலத்தில் நடைபெற்றது. நம் நாட்டில் அமைதியும், சமாதானமும், ஒற்றுமையும் நிலவ மக்கள் அனைவரும் அன்புடனும், சந்தோஷத்துடன் வாழ்வதற்கு இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக அமர வேண்டும். அப்போதுதான் நமது நாட்டின் ஜனநாயகமும், அரசியலமைப்புச் சட்டமும் காப்பாற்றப்படும்.

    குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ரப்பர் தொழிற்சாலை விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்படும். மலைவாழ் மக்களின் வசதிக்காக பஸ் மற்றும் மின்சார வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பள்ளிக்கூடங்கள் அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். எனவே இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் உங்கள் விஜய் வசந்த் ஆகிய எனக்கும், விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தாரகை கத்பர்ட்டுக்கும் கை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் இன்று (புதன்கிழமை) காலை மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இருந்து இறுதிக்கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர் அவர் மண்டைக்காடு புதூர், மணலிவிளை, கூட்டுமங்கலம், கல்லத்திவிளை, காட்டுவிளை, நடுவூர்க்கரை, சேரமங்கலம், பரப்பற்று, பெரியவிளை, மணவாளக்குறிச்சி, முட்டம், அம்மாண்டிவிளை, திருநயினார்குறிச்சி, வெள்ளிமலை, வெள்ளிச்சந்தை, ஈத்தங்காடு, மேலமணக்குடி, கொட்டாரம், அஞ்சுகிராமம் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். நாகர்கோவிலில் மாலை அவர் இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

    Next Story
    ×