search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு அலட்சியப்படுத்துகிறது: வைகோ
    X

    நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு அலட்சியப்படுத்துகிறது: வைகோ

    காவேரி பிரச்சினையிலும், நீட் தேர்வு விவகாரத்திலும் தமிழகத்தை மத்திய அரசு அலட்சியப்படுத்துகிறது என வைகோ கூறியுள்ளார்.
    நெல்லை:

    நெல்லையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவேரி பிரச்சினையிலும், நீட் தேர்வு விவகாரத்திலும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. காவேரி பிரச்சினையில் மத்திய அரசு கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. தற்போது காவேரி பாசன பகுதியான நாகப்பட்டினம், கடலூர் மாவட்டத்தில் சுமார் 57 ஆயிரத்து 500 ஏக்கர் பெட்ரோலிய பொருட்கள் எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இதற்கு தமிழக அரசும் ஒப்புதல் வழங்கி இருப்பதாக தெரிகிறது. இத்திட்டத்தை செயல்படுத்தினால் மிக பெரிய பாதிப்பு ஏற்படும். இத்திட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள் மீது அரசு கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்கு போட்டு கைது செய்வதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.

    உடனடியாக மாணவி வளர்மதி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். குட்கா ஊழலில் ஆவணங்கள் அழிக்கப்பட்டது குறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நீட் தேர்வு தமிழகத்தில் 95 சதவீத மாணவர்களுக்கு எதிரானது. எனவே அதனை நிரந்தரமாக அனுமதிக்க கூடாது. நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. மற்றும் கூட்டணியினர் நாளை நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தை எதிர்த்து ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு அலட்சியப்படுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×