search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி தடுமாற்றம் - மழையால் ஆட்டம் பாதிப்பு
    X

    இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி தடுமாற்றம் - மழையால் ஆட்டம் பாதிப்பு

    இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டுள்ளது.
    கொல்கத்தா:

    இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

    முதல் டெஸ்ட் போட்டி நேற்று கொல்கத்தாவில் தொடங்கியது.

    மழையால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. உணவு இடைவேளைக்கு பிறகு ஆட்டம் நடந்தது. டாஸ் ஜெயித்த இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த ஆடுகளத்தில் இந்திய வீரர்கள் திணறினர்.

    சுரங்கா லக்மல் பந்தில் லோகேஷ் ராகுல் (0), தவான் (8), கேப்டன் விராட்கோலி (0) ஆகியோர் அவுட் ஆனார்கள்.



    இந்திய அணி 11.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 17 ரன் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சம் இல்லாததால் முதல் நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது.

    புஜாரா 8 ரன்னுடனும், ரகானே ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் அரைமணி நேரத்துக்கு முன்பாக காலை 9 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

    ஆனால் காலை 9.15 மணிக்கு தான் ஆட்டம் தொடங்கியது. புஜாராவும், ரகானேவும் தொடர்ந்து விளையாடினார்கள்.

    ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் இருவரும் நிதானமாக விளையாடினார்கள். ஆனால் இந்த ஜோடி நிலைத்து நிற்கவில்லை. ரகானே 4 ரன்னில் அவுட் ஆனார். அவரது விக்கெட்டை ‌ஷனகா கைப்பற்றினார். அப்போது ஸ்கோர் 30 ரன்னாக இருந்தது.



    அடுத்து புஜாராவுடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் நிதானமாகவே விளையாட முயன்றது. 26-வது ஓவரில் இந்தியா 50 ரன்னை தொட்டது. அதே ஓவரில் அஸ்வின் 4 ரன்னில் ‌ஷனகா பந்தில் அவுட் ஆனார்.

    அடுத்து விக்கெட் கீப்பர் விர்த்திமான் சகா களம் வந்தார்.

    புஜாரா மட்டும் ஓரளவு தாக்குபிடித்து விளையாடி வருகிறார். இந்திய அணி 32.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்து இருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. புஜாரா 47 ரன்களுடனும் சகா 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.



    இலங்கை வேகப்பந்து வீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறி வருகிறார்கள்.
    Next Story
    ×