என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: ‘பி’ பிரிவு அணிகள் கண்ணோட்டம்
    X

    சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: ‘பி’ பிரிவு அணிகள் கண்ணோட்டம்

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கோப்பையில், ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகள் குறித்து ஒரு கண்ணோட்டம்.
    மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது.

    இந்தப்போட்டியில் தரவரிசையில் ‘டாப் 8-ல்’ உள்ள நாடுகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளும் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    இந்தியா:



    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை தக்க வைத்துக்கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது.
    2013-ல் இங்கிலாந்தில் நடந்த போட்டியில் டோனி தலைமையிலான அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்று இருந்தது. அதற்கு முன்பு 2002-ல் இலங்கையுடன் இணைந்து கூட்டாக பட்டம் பெற்றது. தற்போது 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.

    நியூசிலாந்து, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைப்பற்றிய பிறகு இந்திய அணி தற்போது தான் ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. அனுபவமும், இளமையும் கொண்ட அணி சமபலத்துடன் திகழ்கிறது. மிடில் ஆர்டர் வரிசை நிலையுடன் காணப்படுகிறது. டோனி, யுவராஜ் சிங், கேதர் ஜாதவ் உள்ளனர். அவர்கள் ஆட்டத்தை மாற்றக்கூடிய அதிரடி வீரர்கள் ஆவார்கள்.

    கேப்டன் விராட் கோலியும், வேகப்பந்து வீரர் பும்ராவும் அணியின் துருப்பு சீட்டாக திகழ்வார்கள். முகமது ஷமியின் வருகை பந்துவீச்சுக்கு கூடுதல் பலம் சேர்க்கும். இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது.

    அணி விவரம்:-

    விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, தவான், ரகானே, யுவராஜ் சிங், டோனி, கேதர் ஜாதவ், ஹர்த்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், தினேஷ் கார்த்திக், பும்ரா.

    தென்னாப்பிரிக்கா:



    உலக தரவரிசையில் ‘நம்பர் 1’ இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கா முக்கியமான ஐ.சி.சி. போட்டிகளில் ‘நாக்அவுட்’டில் தோல்வி அடைந்துவிடும். 1992-ம் ஆண்டில் இருந்து ஐ.சி.சி.யின் 20 போட்டியில் 11-ல் அரையிறுதிக்கு நுழைந்து இருந்தது.

    1998-ம் ஆண்டு நடந்த அறிமுக சாம்பியன்ஸ் டிராபியில் கோப்பையை வென்றது. அதன்பிறகு அந்த அணி இறுதிப்போட்டியை எட்டியது கிடையாது. தற்போதைய தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. கேப்டன் டிவில்லியர்ஸ், வேகப்பந்து வீரர் ரபடா ஆகியோர் அந்த அணியின் துருப்பு சீட்டுகள். 2-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்க சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை இழந்து இருந்தது

    அணி விவரம்:-

    ஏபி டி வில்லியர்ஸ் (கேப்டன்), ஹசிம் அம்லா, குயின்டன் டிகாக், டு பிளிஸ்சிஸ், டுமினி, மில்லர், பெகருதீன், கிறிஸ் மோரிஸ், இம்ரான் தாகீர், கேசவ் மகராஜ், மார்னே மார்கல், பர்னல், பிரிஸ்டோரியஸ், ரபடா, பெகுல்வாயோ.

    பாகிஸ்தான்:



    பாகிஸ்தான் அணி முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி இதுவரை இறுதிப்போட்டிக்கு கூட நுழைந்தது இல்லை. 3 தடவை அரையிறுதி வரை வந்து தோற்று இருக்கிறது. தற்போது உள்ள பாகிஸ்தான் பேட்டிங்கில் பலம் பெற்று இருக்கிறது. கேப்டன் சர்பிராஸ் அகமது, பாபர் ஆசம் போன்ற திறமை வாய்ந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

    அரையிறுதியில் நுழைவது சவாலானதே. கடந்த முறை அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இதனால் இந்த போட்டியில் ‘நாக்அவுட்’ சுற்றுக்கு நுழைவதை இலக்காக கொண்டுள்ளது.

    அணி விவரம்:-

    சர்பிராஸ் அகமது (கேப்டன்), அகமது ஷேசாத், அசார் அலி, ஹபீஸ் அகமது, பாபர் ஆசம், ஹாரிஸ் சோகைல், இமாத் ஹசிம், ஜூனைத்கான், பகீம் அஸ்ரப், பக்கர் ஜமான், ஹசன் அலி, முகமது அமீர், சோயிப் மாலிக், சதாப்கான், வகாப் ரியாஸ்.

    இலங்கை:



    ஜெயவர்த்தனே, சங்ககரா, தில்சான் ஓய்வு பிறகு இலங்கை திணறியே வருகிறது. கடந்த 1 ஆண்டில் 25 ஒருநாள் ஆட்டத்தில் 7-ல் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. இதனால் தான் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ளது.

    மலிங்கா அணிக்கு திரும்பி இருப்பது மட்டுமே ஆறுதலான விஷயமாகும். கேப்டன் மேத்யூஸ், சண்டிமால், குஷால் பெரைரா ஆகியோர் முத்திரை பதிக்க கூடியவர்கள். அரையிறுதியில் நுழைவது சவாலானதே.

    2-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. இதற்கு முன்பு 2002-ம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்து கூட்டாக பட்டம் பெற்றது.

    அணி விவரம்:-

    மேத்யூஸ் (கேப்டன்), உபுல் தரங்கா, சன்டிமால், நிரோஷன் டிக்வெலா, நுவன் பிரதீப், குணரத்னே, கபுகேந்திரா, குலசேகரா, லக்மல், மலிங்கா, குஷால், மெண்டீஸ், குஷால் பெரேரா, திசாரா பெரேரா, பிரசன்னா, லக்சன்.
    Next Story
    ×