search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சியை பிடிக்கும்: கருத்து கணிப்பில் தகவல்
    X

    கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சியை பிடிக்கும்: கருத்து கணிப்பில் தகவல்

    கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா 113 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க மும்முரமாக செயல்பட்டு வருகிறது. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் ஊழல்வாதிகள் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தும், ஜி.எஸ்.டி. வரியினால் எல்லோரும் பாதிக்கப்பட்டனர் என்ற கருத்தை கூறியும் முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் தலைவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    பாரதிய ஜனதா தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா கர்நாடக மாநிலம் முழுவதும் பிரசார ரத யாத்திரை நடத்தி வருகிறார். இந்த நிலையில் மதசார்பற்ற ஜனதா தலைவர் குமாரசாமியும் நேற்று பிரசார பயணத்தை தொடங்கினார்.

    இந்த நிலையில் காப்ஸ் என்ற தனியார் நிறுவனம் கர்நாடக மாநிலத்தில் தற்போது தேர்தல் நடந்தால் யார் ஆட்சியை பிடிப்பார்கள்? என்று கருத்து கணிப்பு நடத்தியது.

    இதில் பாரதிய ஜனதா 113 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று அந்த கருத்து கணிப்பில் தெரியவந்தது.

    காங்கிரஸ் கட்சி 85 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 25 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று அந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

    பழைய மைசூர் மண்டலத்தில் மொத்தம் 37 தொகுதிகள் உள்ளன. அதில் காங்கிரஸ் 21 தொகுதிகளை கைப்பற்றும் என்று கூறப்படுகிறது. பெங்களூரு மண்டலத்தில் உள்ள 31 தொகுதிகளில் 16 இடங்களை காங்கிரஸ் கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக அந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் வட கர்நாடக மாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகளை பாரதிய ஜனதா கைப்பற்ற வாய்ப்புள்ளது என்று அந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

    கர்நாடக மத்திய மண்டலத்தில் பாரதிய ஜனதாவும், காங்கிரசும் சரிசமமான தொகுதிகளை பெறும் என்றும், அந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×