search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடியின் சுதந்திர தின உரை ஏமாற்றம் அளிக்கிறது - எதிர்க்கட்சிகள் கண்டனம்
    X

    மோடியின் சுதந்திர தின உரை ஏமாற்றம் அளிக்கிறது - எதிர்க்கட்சிகள் கண்டனம்

    பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை குறித்து காங்கிரஸ் மூத்த செய்தித்தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறியதாவது:-

    பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. அவர் உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் ஆஸ்பத்திரியில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து எந்த கவலையும் படவில்லை.

    நிலைமையின் தீவிரத்தன்மையை அவர் வெளிப்படுத்தவில்லை. மிகவும் சாதாரணமாக, அதை இயற்கை பேரழிவுடன் ஒப்பிட்டு பேசினார்.

    பதவி ஏற்று 3 ஆண்டுகள் கழிந்தநிலையில், மோடி தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தோல்வி அடைந்தது பற்றியும் பேசி இருக்கலாம். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை அளிப்பதாக அவர் வாக்குறுதி அளித்தார். ஆனால் இனிமேல் அதைப்பற்றி பேசவே மாட்டார்.

    பணமதிப்பு நீக்க நடவடிக்கையில், ரிசர்வ் வங்கிக்கு திரும்பிய பழைய ரூபாய் நோட்டுகளில் கருப்பு பணம் எவ்வளவு என்ற விவரத்தை அவர் ஏன் வெளியிடவில்லை? ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறும் அவர், ஏன் கடந்த 3 ஆண்டுகளாக ‘லோக்பால்’ அமைப்பை உருவாக்கவில்லை? ஊழல் ஒழிப்பு சட்டங்களையும், தகவல் பெறும் உரிமை சட்டத்தையும் நீர்த்துப்போக செய்துள்ளார்.

    ஜி.எஸ்.டி. விஷயத்தில் சொந்தம் கொண்டாடும் பிரதமர், அதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளித்ததையும் பாராட்டி இருக்கலாம். வன்முறையில் ஈடுபட்டு, அச்ச உணர்வை உண்டாக்குபவர்களுக்கு எதிராக பிரதமர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

    இவ்வாறு ஆனந்த் சர்மா கூறினார்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா கூறியதாவது:-

    பிரதமர் உரையில் பிரமாதமாக எதுவும் இல்லை. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றி பிரதமர் எதுவும் பேசவில்லை. காஷ்மீர் பிரச்சினைக்கு ராணுவ தீர்வு காண முயலும் அவர், காஷ்மீரிகளை அரவணைப்போம் என்று கூறுவது நம்பும்படி இல்லை. வகுப்புவாத மோதலில் ஈடுபட வேண்டாம் என்று அவர் முதலில் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா, ‘காஷ்மீர் பிரச்சினையை துப்பாக்கி தோட்டாக்களால் தீர்க்க முடியாது என்று பிரதமர் கூறி இருப்பது, பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் என இருதரப்புக்குமே பொருந்தும் என்று கருதுகிறேன்’ என்று கூறியுள்ளார். 
    Next Story
    ×