search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு எங்களை மிரட்டுகிறது: உ.பி. சட்டசபையில் இருந்து சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங். வெளிநடப்பு
    X

    அரசு எங்களை மிரட்டுகிறது: உ.பி. சட்டசபையில் இருந்து சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங். வெளிநடப்பு

    உத்தரப்பிரதேச மாநில சட்டசபையில் அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து, எதிர்க்கட்சிகளான சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று காலை சட்டமன்றம் கூடியதும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், சமாஜ்வாடி கட்சி உறுப்பினருமான ராம் கோவிந்த் சவுத்ரி எழுந்து நின்று, எதிர்க்கட்சியினருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அரசு செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

    இதுதொடர்பாக சவுத்ரி கூறுகையில், “ஆளும் கட்சியை தொடர்ந்து விமர்சனம் செய்துவரும் எதிர்க்கட்சியினருக்கு ஆளும் தரப்பினர் மிரட்டல் விடுக்கின்றனர். அவர்களின் குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடப்பட்டுள்ளது. எனது 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இதுபோல் நான் பார்த்ததில்லை. எனவே, ஆளும் கட்சியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம்’’ என தெரிவித்துள்ளார்.

    சவுத்ரியின் கருத்துக்கு ஆதரவாக பேசிய பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த லால்ஜி வர்மா கூறுகையில், “ஆளும் கட்சியை எதிர்த்து பேசுபவர்களுக்கு சட்டசபையில் பேச வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. மேலும், ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் தகாத வார்த்தைகளால் பேசி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் அவையில் இருப்பது அர்த்தமில்லை’’ என கூறினார்.

    இதேபோல், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் அஜய்குமார் லல்லு கூறுகையில், “ஆளும் கட்சியினர் மீது குற்றம் சாட்டி பேசும்போது மைக் அணைக்கப்பட்டு விடுகிறது. எனவே எதிர்க்கட்சிகளிடம் கடுமையாக நடந்து கொள்ளும் ஆளும் தரப்பை கண்டித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்வது என முடிவெடுத்துள்ளோம்’’ என்றார்.

    இதற்கிடையே, சபாநாயகர் ஹிருதய் நரேன் தீட்சித், வெளிநடப்பு செய்ய வேண்டாம் என விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்து அவையிலிருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×