search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி மன்ற தேர்தல் நடக்காமல் இருப்பதற்கு தி.மு.க. தான் காரணம்: கோவை செல்வராஜ்
    X

    உள்ளாட்சி மன்ற தேர்தல் நடக்காமல் இருப்பதற்கு தி.மு.க. தான் காரணம்: கோவை செல்வராஜ்

    தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருப்பதற்கு தி.மு.க. தான் காரணம் என அ.தி.மு.க. செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோவை செல்வராஜ் கூறியுள்ளார்.
    கோவை:

    அ.தி.மு.க. செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோவை செல்வராஜ் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அவரது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தமிழக உள்ளாட்சி துறையில் குற்றச்சாட்டுகளை கூறி அறிக்கை வெளியிட்டிருந்தார். மக்களுக்காக செயல்படும் அம்மாவுடைய அரசு எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்படுவதை கண்டு, அரசியலில் தனக்கு எதிர்காலமே இருக்காது என்ற பயத்தில் சிந்திக்காமல் கற்பனை கதைகளை வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

    தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருப்பதற்கு காரணம் தி.மு.க. தான். 2016-ல் தமிழக அரசு தேர்தல் தேதியை அறிவித்து எல்லா கடசிகளும் வேட்பு மனு தாக்கல் செய்து, வாக்கு கேட்பதற்கு வீடு, வீடாக சென்று கொண்டிருந்தனர். அப்போது தோல்வியின் பயத்தால் தி.மு.க. ஒரு வழக்கு தொடுத்தது.

    2011 மக்கள் தொகை அடிப்படையில் வார்டுகளை பிரிக்க வேண்டும், புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வார்டுகளை மாற்றி தேர்தலை நடத்த வேண்டும் என்று வழக்கு தொடுத்து தடையாணை பெற்றார்கள். அதனால் உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழக அரசு செலவு செய்த ரூ.110 கோடி செலவு தொகை வீணாக்கப்பட்டது. இதற்கு முழு பொறுப்பு தி.மு.க. தான்.

    இப்போதும் உள்ளாட்சி மன்ற தேர்தல் நடக்காமல் இருப்பதற்கு காரணம் தி.மு.க. தான். தி.மு.க. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்கள். வழக்கு நிலுவையில் உள்ளது. தமிழக அரசு கடந்த சட்டமன்ற கூட்டத்தில் 2011 மக்கள் தொகை அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்காக ஒரு ஆணையம் அமைத்து முழு வேகமாக அந்த பணிகள் நடந்து வருகிறது. இதை மாற்றி ஏதோ தமிழக அரசு தான் உள்ளாட்சி மன்ற தேர்தல் நடத்தாமல் உள்ளது என்ற போலி பிரசாரத்தை தி.மு.க. நடத்துகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.


    கமல்ஹாசன் படித்த மருத்துவர் அல்ல. சித்த மருத்துவரோ, அலோபதி மருத்துவரோ அல்ல. மருத்துவ துறைக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் தவறான கருத்துகளின் அடிப்படையில், தமிழக அரசு வழங்கும் நிலவேம்பு மருந்தை தற்போது கொடுக்க வேண்டாம் என தனது ரசிகர்களுக்கு கூறி உள்ளார். மத்திய அரசின் டாக்டர்கள் குழு தமிழகத்தில் ஆய்வு நடத்தி உள்ளது. தமிழகத்தில் எல்லா அரசு ஆஸ்பத்திரிகளிலும் சித்தா மருந்துக்கென்று தனி பிரிவு உள்ளது. அதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    முதல்-அமைச்சரின் நடவடிக்கையால் தமிழகம் முழுவதும் உள்ள குளம், குட்டைகளை ஆழப்படுத்தப்பட்டது. எனவே சமீபத்தில் பெய்த மழையில் அனைத்து குளங்களும் நிரம்பி உள்ளது. இதனால் குடிநீர் பிரச்சனை, விவசாயத்துக்கு தண்ணீர் பிரச்சனை தீர்ந்துள்ளது. தமிழக முதல்-அமைச்சரின் செயல்பாடுகளை ஒட்டு மொத்த தமிழக மக்களும் பாராட்டுகிறார்கள். எனவே ஸ்டாலின், கமல்ஹாசன் போன்றவர்களின் ஆலோசனையோ, கருத்துக்களும் தேவையில்லை. ஏனென்றால் இவர்கள் மக்களுக்காக சிந்திக்காமல், சுய நலத்திற்காக சிந்திக்கிறார்கள். இவர்களை மக்கள் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். தி.மு.க. என்பது எதிர்காலமே இல்லாத இயக்கம். இன்று ஸ்டாலின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் மக்கள் கொத்து, கொத்தாக மாண்டு போவதாக அப்பட்டமான பொய்களை கூறி இருக்கிறார். இது கண்டனத்திற்குரியது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×