search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை ஒரே நாளில் 2¼ அடி உயர்வு
    X

    குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை ஒரே நாளில் 2¼ அடி உயர்வு

    கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் அணைகளுக்கு 2885 கனஅடி தண்ணீர் வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 2¼ அடி உயர்ந்துள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இரணியல், ஆணைக்கிடங்கு, கோழிப்போர்விளை, புத்தன் அணை, குழித்துறை, சுருளோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    நாகர்கோவிலில் நேற்று காலை முதலே மழை தூறிக்கொண்டே இருந்தது. இரவு அவ்வப்போது மழை பெய்தது. இதனால் இதமான குளிர்க்காற்றும் வீசியது. இன்று காலையிலும் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. திடீர் திடீரென மழை பெய்தது.

    திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையினால் அருவியில் வெள்ளம் கொட்டி வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும் கனமழை பெய்தது. சிற்றார்-2-ல் அதிகபட்சமாக 58 மி.மீ. மழை பதிவானது.

    மலையோர பகுதியிலும் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 2¼ அடி உயர்ந்துள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று 14.40 அடியாக இருந்தது. இன்று காலை 16.60 அடியாக உயர்ந்தது. அணைக்கு 1752 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் நேற்று 38.10 அடியாக இருந்தது. இன்று 40.60 அடியாக உயர்ந்தது. அணைக்கு 1133 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருகிறது. அணையில் இருந்து 151 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 10 மாதங்களுக்கு பிறகு இன்று ஒரு அடியை எட்டி உள்ளது.

    தொடர் மழையின் காரணமாக சானல்களிலும், கால்வாய்களிலும் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இதையடுத்து பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பேச்சிப்பாறை-57.6, பெருஞ்சாணி-46.2, சிற்றாறு-1-50, சிற்றாறு-2-58, ஆரல்வாய்மொழி-7.4, மாம்பழத்துறையாறு-22, ஆணைக்கிடங்கு-19.6, இரணியல்-22, குளச்சல்-15.4, அடையாமடை-48, கோழிப்போர்விளை-32, முள்ளங்கினாவிளை-42, புத்தன் அணை-47, திற்பரப்பு-41.6, நாகர்கோவில-7, பூதப்பாண்டி-8, சுருளோடு-38.6, கன்னிமார்- 11.6, மயிலாடி-8, கொட்டாரம்-10.8, தக்கலை-18.4, குழித்துறை-24.2, களியல்- 17.4.
    Next Story
    ×