search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமரை சந்திக்க மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி பெற்று தருவேன்: எச்.ராஜா
    X

    பிரதமரை சந்திக்க மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி பெற்று தருவேன்: எச்.ராஜா

    மு.க. ஸ்டாலின் போலி வேடம் போடுவதையும், பொய் பேசுவதையும் நிறுத்திக் கொண்டால் பிரதமரை சந்திக்க நானே நேரடியாக அனுமதி வாங்கி தருவேன் என ராசிபுரத்தில் எச்.ராஜா கூறியுள்ளார்.
    ராசிபுரம்:

    பாதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா ராசிபுரத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.டி.) மாட்டிறைச்சிக்கு அனுமதி கொடுத்த மாணவர்களின் டீன் சிவகுமாருக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அவரை ஐ.ஐ.டி. நிர்வாகம் சஸ்பெண்டு செய்ய வேண்டும். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தை போல தத்தாரிகளின் கூடாரமாக ஐ.ஐ.டி.யை மாற்ற டீன் சிவகுமார் முயற்சி செய்து வருகிறார். இதுபோன்ற சக்திகளை அனுமதித்தால் ஐ.ஐ.டி.க்குள் நாங்களும் உள்ளே வரவேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கிறேன்.

    மத்திய அரசின் திட்டங்களை எல்லாம் தாங்கள் தான் கொண்டு வந்தது போல மாநில அரசு செயல்படுவது சரி அல்ல. மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசின் திட்டங்களாகவே மக்களை சென்றடைய வேண்டும். அதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மத்திய அரசு திட்டங்களில் பிரதமர் மோடியின் படம் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். கழிப்பறை திட்டத்தில் ஏற்கனவே இருக்கும் கழிப்பறைகளில் வண்ணங்களை மட்டும் பூசிவிட்டு பணத்தை எடுத்து விடுகின்றனர். கழிப்பறையில் கூட பணத்தை திருடும் அரசை இதுவரை நான் பார்த்ததில்லை.

    மாட்டிறைச்சி தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பு புதியது அல்ல. ஏற்கனவே உள்ள பல சட்டங்களின் ஒருங்கிணைப்பு தான் அது. ஏதாவது ஒரு கலவரத்தை தூண்டுவது போல சிலர் செயல்படுகின்றனர். திருமாவளவன், சீமான் போன்றவர்கள் டாக்டர் கிருஷ்ணசாமியை பார்த்து அரசியல் கற்றுக் கொள்ள வேண்டும். கிருஷ்ணசாமி தேசிய பார்வை உள்ள ஒரு தலைவர்.

    இயற்கை வேளாண்மைக்குள் நாம் போக வேண்டும் என்றால் பசு பாதுகாக்கப்பட வேண்டும். உள்நாட்டில் கலவரம் வரப்போகிறது என்று தமிழருவி மணியன் கூறுகிறார். ஆனால் கலவரம் வராது. பண மதிப்பிழப்பு பிரச்சனையில் தான் கலவரம் வரும் என்று அனைவராலும் எதிர் பார்க்கப்பட்டது. அதிலும் நல்ல விதத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு பிரச்சனை இல்லாமல் சரி செய்யப்பட்டது.

    அதாவது மோடியின் நிர்வாக திறமையின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை தான் இதற்கு காரணம்.

    மோடியின் திட்டங்களை தமிழக மக்களுக்கு எடுத்துச் சொல்ல 20 நாள் பிரசார கூட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில் மத்திய மந்திரிகளும், பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களை சேர்ந்த தலைவர்களும் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் தமிழத்திற்கு வந்து பிரசாரம் செய்ய உள்ளனர்.


    10 வருட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தினமும் ஒரு ஊழல் என்ற ரீதியில் செயல்பட்டது. ஆனால் தற்போது உள்ள மோடி அரசு வாரம் ஒரு திட்டம் என்ற ரீதியில் செயல்படுகிறது. அதே நேரத்தில் ஊழலற்ற ஆட்சியாகவும் இந்த ஆட்சி நடந்து வருகிறது.

    மோடி ஊழலற்ற ஆட்சி நடத்துகிறார் என்று எனது நண்பர் வைகோ கூட பாராட்டி இருக்கிறார். அவரது பாராட்டை மற்றவர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு வருமானவரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 91 லட்சமாக உயர்ந்துள்ளது, வரி வசூலும் அதிகரித்துள்ளது.

    எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னை சந்திப்பதற்கு பிரதமர் மோடி நேரம் ஒதுக்கவில்லை என்று கூறி இருக்கிறார். மு.க. ஸ்டாலின் போலி வேடம் போடுவதையும், பொய் பேசுவதையும் நிறுத்திக் கொண்டால் பிரதமரை சந்திக்க நானே நேரடியாக அனுமதி வாங்கி தருவேன்.

    இந்தியை மு.க. ஸ்டாலின் எதிர்த்து வருகிறார். ஆனால் ஸ்டாலின் உறவினர் நடத்தும் பள்ளியில் தமிழில் பேச அனுமதிப்பது இல்லை, ஆங்கிலத்தில் தான் பேச அனுமதிக்கிறார்கள். தமிழில் பேசும் மாணவருக்கு ரூ. 500 வரை அபராதம் விதிக்கிறார்கள். முதலில் அந்த பள்ளியில் தமிழில் பேச அனுமதித்துவிட்டு இவர் இந்தியை பற்றி பேசட்டும்.

    மேட்டூர் அணையை தூர்வாரும் பணியை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி இருப்பது வரவேற்கத்தக்கது.

    பிரிவினை வாதம் பேசுபவர்கள் எங்கே இருக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும். பிரிவினை வாதம் பேசிய வைகோ ஜெயிலில் இருந்துவிட்டு வந்தார் என்பதை மற்றவர்கள் உணர வேண்டும்.

    தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×