search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாட்டு இறைச்சி தடை சட்டத்தை எதிர்த்து வருகிற 1-ந் தேதி ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர்
    X

    மாட்டு இறைச்சி தடை சட்டத்தை எதிர்த்து வருகிற 1-ந் தேதி ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர்

    மத்திய அரசு பிறப்பித்துள்ள மாட்டு இறைச்சி தடை சட்டத்தை எதிர்த்து வருகிற 1-ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
    சிங்கை:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தலுக்கு முன்பாக நரேந்திர மோடி ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தார். சுவிஸ் வங்கியில் இருந்து மீட்கப்படும் கருப்பு பணத்தில் இருந்து ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் ரூபாயை வரவு வைப்பதாக சொன்னார்.

    வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருவதாகவும், விவசாயிகளின் உற்பத்தி பொருட்கள் விலையை 50 சதவீதம் அதிகரித்து தருவதாகவும் கூறினார். மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைப்பதாகவும் கூறினார். இதில் எதுவும் நடக்கவில்லை.

    பண மதிப்பு இழப்புக்கு பிறகு, பணப்புழக்கமானது பணக்காரர்களின் கையில் தான் உள்ளது. ஏழைகளிடம் பணம் இல்லை. இலங்கை அரசு மீனவர்களை துன்புறுத்துகிறது. இதற்கு தீர்வு காணாமல் அதற்கு மாறாக இந்தி திணிப்பு, ராமர் கோவில் பிரச்சனை, மதவாத தூண்டுதல், மொழிவாரி பிரச்சனை, பா.ஜ.க.ஆட்சி இல்லாத மாநிலத்தை மிரட்டுவது போன்ற தேவையில்லாத நடவடிக்கையில் தான் மோடி அரசு செயல்படுகிறது.

    தற்போது உணவு பழக்க வழக்கத்திலும் அவரவர் உரிமையை தடுக்கிறது. மாட்டு இறைச்சியை வெளிநாட்டினர் சாப்பிடுவதற்காக ஏற்றுமதி செய்யலாம். ஆனால் நம் நாட்டு மக்கள் சாப்பிடக் கூடாதா? தனிமனிதர் உணவு பழக்கவழக்கங்களில் அரசு சட்டத்தின் மூலம் நுழைய முயற்சிப்பது கண்டனத்துக்குரியது.

    இந்த உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் காங்கிரஸ் சிறுபான்மை அணி சார்பில் போராட்டம் நடத்தப்படும். மேலும் வருகிற 30-ந் தேதி (நாளை) காங்கிரஸ், தி.மு.க., தி.க. மற்றும் அனைத்து கட்சி கூட்டமைப்பு சார்பில் கண்டன கூட்டம் நடக்கிறது. ஜூன் 1-ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.


    தமிழக அரசை பொறுத்த வரை ஜெயலலிதா என்றைக்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாரோ? அன்று முதல் தமிழக அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. அமைச்சர்களுக்குள் கோஷ்டி பூசல், சட்டமன்ற உறுப்பினர்களுக்குள் கோஷ்டி பூசல் இப்படிதான் உள்ளது. ரஜினிகாந்த் எனது நல்ல நண்பர் எனக்கு தெரிந்தவரை ரஜினிகாந்த் எந்த கட்சியுடனும் சேரமாட்டார். அவர் தனிக்கட்சி தொடங்கினால் காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறோம். கமல்ஹாசன் வாழும் நடிகர் திலகம். அவருக்கு பேசுவதற்கு உரிமை உண்டு. அவரை பற்றி கருத்து கூற இயலாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×