ஆப் ஸ்டோரில் இருந்து மாயமான டெலிகிராம் ஆப் - பயனர்கள் குமுறல்

கொள்கை தொடர்பான நடவடிக்கை காரணமாக இந்த செயலி நீக்கப்பட்டதா என்பது குறித்தும் இதுவரை தெளிவாக தெரியவில்லை.
Teleram App Logo
Published on

உலகம் முழுவதும் ஆப்பிளின் ஆப் ஸ்டோர் தேடல் முடிவுகளில் இருந்து டெலிகிராம் மறைந்துவிட்டது. இதனால், பயனர்கள் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் இந்த குறுந்தகவல் செயலியை தேடவோ அல்லது பதிவிறக்கம் செய்யவோ முடியாமல் உள்ளனர். இந்த நீக்கத்தின் விளைவாக, டெலிகிராமின் அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோர் பட்டியலில் "பக்கம் காணப்படவில்லை" (Page Not Found) என்ற பிழை ஏற்படுகின்றன.

தற்போதைய நிலவரப்படி, செயலி காணாமல் போனது குறித்து ஆப்பிள் நிறுவனமோ அல்லது டெலிகிராம் தரப்பிலோ அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை, மேலும் டெலிகிராம் தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவும் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவா அல்லது கொள்கை தொடர்பான நடவடிக்கை காரணமாக இந்த செயலி நீக்கப்பட்டதா என்பது குறித்தும் இதுவரை தெளிவாக தெரியவில்லை.

மீண்டும் நீக்கம்:

ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டெலிகிராம் நீக்கப்படுவது இது முதல் முறையல்ல. முன்னதாக பிப்ரவரி 2018-இல், பொது சேனல்கள் வழியாக பரவிவரும் பொருத்தமற்ற மற்றும் சட்டவிரோத உள்ளடக்கத்தை கண்டறிந்த பிறகு, ஆப்பிள் நிறுவனம் டெலிகிராம் மற்றும் அதன் சோதனை முயற்சியான டெலிகிராம் எக்ஸ் செயலி ஆகிய இரண்டையும் தற்காலிகமாக நீக்கியது.

பிட்பினாஸ் வெளியிட்டுள்ள தகவல்படி, 24 மணி நேரத்திற்குள் இரு செயலிகளையும் மீட்டெடுப்பதற்கு முன்பு, டெலிகிராம் தனது உள்ளடக்க கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்தவும், விதிமீறும் கணக்குகளை நிரந்தரமாக தடை செய்யவும், கொள்கை மீறல்களை சரிசெய்யவும் ஆப்பிள் நிறுவனம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

பதிவிறக்கம் செய்ய முடியாது:

தற்போதைய நீக்கம் ஏற்கனவே உள்ள டெலிகிராம் கணக்குகளை பாதிக்காது, ஆனால் இது ஆப்பிள் பயனர்களுக்கு பல வரம்புகளை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே டெலிகிராம் செயலியை இன்ஸ்டால் செய்துள்ள பயனர்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம், ஆனால் அதை அன்-இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது, ஏனெனில் பிட்பினாஸ் தகவலின்படி, தற்போது அதை ஆப் ஸ்டோரில் இருந்து மீண்டும் பதிவிறக்கம் செய்ய முடியாது.

புதிய ஐபோன் அல்லது ஐபேட் செட்-அப் செய்யும் பயனர்களாலும் அதிகாரப்பூர்வ டெலிகிராம் செயலியை இன்ஸ்டால் செய்ய முடியாது. மேலும், இந்த பிரச்சனை மீண்டும் சரிசெய்யப்படும் வரை, ஐ.ஓ.எஸ் அப்டேட்கள், பிழைத் திருத்தங்கள், செயல்திறன் மேம்பாடுகள் மற்றும் செக்யூரிட்டி பேட்ச்கள் தற்காலிகமாக கிடைக்காது.

இணைய பதிப்பு:

இருப்பினும், டெலிகிராமின் இணைய பதிப்பு, விண்டோஸ் மற்றும் மேக்ஓ.எஸ். டெஸ்க்டாப் செயலிகள் மற்றும் ஆண்ட்ராய்டு செயலி ஆகியவை வழக்கம் போல் இயங்கி வருகின்றன.

இதற்கிடையில், ஆப் ஸ்டோரில் இருந்து டெலிகிராம் திடீரென மறைந்தது குறித்து பயனர்கள் சமூக ஊடகங்களில் புகார் தெரிவித்து, ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்து, தங்கள் குழப்பத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

டெலிகிராம் என்பது அதன் வேகம், பாதுகாப்பு மற்றும் பல சாதனங்களில் ஒரே நேரத்தில் இயங்கும் தன்மைக்காக அறியப்படும் ஒரு கிளவுட் அடிப்படையிலான இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமாகும். 1 பில்லியனுக்கும் அதிகமான செயலில் உள்ள பயனர்களுடன், இது உலகில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட டாப் 5 குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக திகழ்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com