பன்மடங்கு பணிநீக்கம்.. வேலைவாய்ப்பில் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும் ஏஐ - ஆந்த்ரோபிக் CEO வார்னிங்

கணிப்புகள் மிகைப்படுத்தப்பட்டவை என ஓபன்ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேனுக்கு பதிலடி
பன்மடங்கு பணிநீக்கம்.. வேலைவாய்ப்பில் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும் ஏஐ - ஆந்த்ரோபிக் CEO வார்னிங்
Published on

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உலக அளவில் லட்சக்கணக்கான வைட் காலர் வேலைகள் பறிபோகும் என்ற கணிப்புகள் மிகைப்படுத்தப்பட்டவை என ஓபன்ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் அண்மையில் பேசியிருந்தார்.

இந்நிலையில் ஓபன் ஏஐ உடைய நேரடி போட்டியாளரான ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் சிஇஓ டேரியோ அமோடி இதற்கு நேர்மாறான கூற்றை முன்வைத்துள்ளார்.

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் முடங்குவது என்பது தற்காலிகமான ஒன்று அல்ல, அது நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று டேரியோ அமோடி எச்சரித்துள்ளார்.

பிரச்சனை

அவர் எழுதியுள்ள கட்டுரையில், "ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்படும் வேலை இழப்புகள் என்பது எதிர்பாராமல் நடக்கும் பக்கவிளைவு கிடையாது.

மனிதனின் சிந்தனைத் திறனையும், அறிவாற்றலையும் அப்படியே நகலெடுக்கும் வகையில் இத்தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளதால், மனித உழைப்பை இது நிரந்தரமாக மாற்றி அமைப்பது இதன் உள்ளார்ந்த இயல்பு.

ஏஐ மிக அதிவேகமாக வளர்ந்து வருவதால், அரசுகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இப்போதே பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

தீர்வு

ஏஐ வேலையிழப்புக்கு தீர்வாக அமோடி கூறுவன பின்வருமாறு,

ஏஐ வருகையால் தங்களின் தற்போதைய வேலையை இழந்து, குறைவான ஊதியத்தில் வேறு வேலைகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு அரசு காப்பீடு வழங்க வேண்டும்.

ஏஐ காலத்திலும் மனிதத் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யாமல் தக்க வைத்துக் கொள்ளும் நிறுவனங்களுக்குத் வரிச் சலுகைகளை அரசு அறிவிக்க வேண்டும்.

தொழிலாளர்கள் புதிய ஏஐ தொழில்நுட்பத்திற்கு ஏற்பத் தங்களை மாற்றிக் கொள்ள அரசு தரப்பில் சிறப்புப் பயிற்சிகளும், நிதி உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

50 விழுக்காடு

முன்னதாக அடுத்த 5 ஆண்டுகளில் என்ட்ரி லெவல் வைட் காலர் வேலைகளில் சுமார் 50 விழுக்காடு வேலைகளை ஏஐ ஒழித்துவிடும் என்றும், இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் 10% முதல் 20% வரை உயரக்கூடும் என்று அமோடி குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com