பட்ஜெட் விலையில் புது ரெட்மி ஸ்மார்ட்வாட்ச்கள்... லீக் ஆன முக்கிய தகவல்கள்!

இதில் பல்வேறு சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரெட்மி வாட்ச் 6
Published on

சில மாதங்களுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச சந்தைகளில் 'ரெட்மி வாட்ச் 6'-ஐ அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து, இப்போது 'ரெட்மி வாட்ச் 6 ஆக்டிவ்' மற்றும் 'ரெட்மி வாட்ச் 6 லைட்' ஆகிய மாடல்களை அறிமுகப்படுத்த சியோமி நிறுவனம் தயாராகி வருவதாக தெரிகிறது.

இவற்றின் வெளியீட்டுத் தேதி குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை என்றாலும், பிரபல டிப்ஸ்டரான சுதன்ஷு மூலம் இந்த ஸ்மார்ட்வாட்ச்களின் முக்கிய சிறப்பம்சங்கள், ரெண்டர் படங்கள் மற்றும் ஐரோப்பாவில் எதிர்பார்க்கப்படும் விலை விவரங்கள் கசிந்துள்ளன.

'ரெட்மி வாட்ச் 6 ஆக்டிவ்' சற்று குறைவான விலையில் கிடைக்கும் மாடலாகவும், மேம்பட்ட அம்சங்களை விரும்பும் பயனர்களை குறிவைப்பதாகவும் அமைகிறது. அதே சமயம், 'வாட்ச் 6 லைட்' மாடலானது அடிப்படை அளவிலான உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி கண்காணிப்பு தேவைகளை மட்டும் எதிர்பார்க்கும் பயனர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று தெரிகிறது.

சிறப்பம்சங்கள்:

ரெட்மி வாட்ச் 6 மாடலில் உள்ள 2.07-இன்ச் ஸ்கிரீனுடன் ஒப்பிடும் போது, ரெட்மி வாட்ச் 6 ஆக்டிவ் மாடலில் சற்றே சிறிய அளவிலான 1.85-இன்ச் AMOLED ஸ்கிரீன் கொண்டிருக்கும். அதேபோல, 'வாட்ச் 6'-இன் அதிக ரெசல்யூஷன் 432×514 பிக்சல்களுடன் ஒப்பிடும் போது, 390×450 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ரெட்மி வாட்ச் 6 ஆக்டிவ் ஸ்கிரீனின் பிரைட்னஸ் சற்று குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது.

இதன் அம்சங்களை பொறுத்தவரை ரெட்மி வாட்ச் 6 ஆக்டிவ் மாடலில் ப்ளூடூத் 5.3 தொழில்நுட்பம் மூலம் ப்ளூடூத் காலிங் வசதி, கால் மற்றும் நோட்டிபிகேஷன் மற்றும் 140-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், இதில் பல்வேறு சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் இதயத் துடிப்பு கண்காணிப்பு, SpO₂, தூக்கத்தைக் கண்காணித்தல், கடந்த தூரம் மற்றும் எரிக்கப்பட்ட கலோரிகள் ஆகியவற்றை கண்காணித்தல், மற்றும் ஒரு நாளில் நடந்த படிகளை எண்ணும் 'பெடோமீட்டர்' போன்ற பல கண்காணிப்பு வசதிகள் இதில் கிடைக்கும். ரெட்மி வாட்ச் 6 ஆக்டிவ் மாடலில் 470mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம்.

ரெட்மி வாட்ச் 6 லைட் அம்சங்கள்:

இந்த மாடலில் 1.96 இன்ச் AMOLED ஸ்கிரீன், ரெட்மி வாட்ச் 6 ஆக்டிவ் மாடலில் உள்ளதை போன்ற இதயத் துடிப்பு கண்காணிப்பு, SpO₂, தூக்கத்தைக் கண்காணித்தல், கடந்த தூரம் மற்றும் எரிக்கப்பட்ட கலோரிகள் ஆகியவற்றை கண்காணித்தல், மற்றும் ஒரு நாளில் நடந்த படிகளை எண்ணும் 'பெடோமீட்டர்' போன்ற பல கண்காணிப்பு வசதிகள் இதிலும் வழங்கப்படலாம்.

இத்துடன் 9 ஆக்சிஸ் மோஷன் சென்சார், மல்டி சிஸ்டம் பொசிஷனிங் மற்றும் ஸ்பீக்கர் வழங்கப்படலாம். இந்த மாடலில் 470mAh பேட்டரி வழங்கப்படலாம். மற்றப்படி இரு மாடல்களும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களுடன் இணைந்து இயங்கும் திறன் கொண்டிருக்கும்.

விலையை பொருத்தவரை ரெட்மி வாட்ச் 6 ஆக்டிவ் மாடல் 50 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 5500 என்றும் ரெட்மி வாட்ச் 6 லைட் மாடல் 60 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 6600 வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com