

ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஐபோனை செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது . ப்ளூம்பெர்க்கின் மார்க் குர்மன் கூற்றுப்படி, ஆப்பிள் சமீபத்தில் அறிமுகப்படுத்திய 'ஆப்பிள் அப்கிரேட்' திட்டத்தின் கீழ் ஆதரிக்கப்படும் முதல் முக்கிய தயாரிப்புகளில் இந்த சாதனமும் ஒன்றாக இருக்கும்.
கிளார்னாவின் ஆதரவுடன் வழங்கப்படும் ஆப்பிள் அப்கிரேட் (Apple Upgrade) திட்டம், தகுதியான ஆப்பிள் சாதனங்களுக்கு வாடிக்கையாளர்களை மாதந்தோறும் பணம் செலுத்த அனுமதிக்கிறது.
குத்தகைக் காலத்தின் முடிவில், பயனர்கள் ஒரு புதிய சாதனத்திற்கு மேம்படுத்திக்கொள்ளலாம், சாதனத்தை திருப்பி கொடுக்கலாம் அல்லது மீதமுள்ள தொகையை செலுத்தி அதை தங்களிடமே வைத்துக்கொள்ளலாம். ஆப்பிள் வாடிக்கையாளர் அனுபவத்தை நிர்வகிக்க, கிளார்னா நிதியுதவியை கையாளுகிறது.
ஆப்பிள் நிறுவனம் முன்னதாக, தனக்குள்ளேயே ஒரு வன்பொருள் சந்தா சேவையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராய்ந்திருந்தது. ஆனால், செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் மற்றும் ஒழுங்குமுறை சார்ந்த கவலைகள் காரணமாக அந்த திட்டத்தை கைவிட்டதாகவும், அதன் பிறகு கிளார்னாவுடன் தற்போதைய குத்தகை மாதிரியை அறிமுகப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் மடிக்கக்கூடிய ஐபோனை ஒரே முறை வாங்குவதற்கு பதிலாக குத்தகைக்கு எடுக்க முடியும் என்று குர்மன் கூறுகிறார்.
மடிக்கக்கூடிய ஐபோன் விலை 2,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1,90,360) விலையில் செப்டம்பர் மாதம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு தொகையையும் முன்பணமாக செலுத்துவதற்கு பதிலாக, ஆப்பிள் அப்கிரேட் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த சாதனத்தை மாதத்திற்கு சுமார் $60 முதல் $70 வரை குத்தகைக்கு எடுக்க முடியும் என்று குர்மன் கூறுகிறார்.
முன்னதாக இணையத்தில் லீக் ஆன தகவல்களின்படி ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் விலையை குறைந்தபட்சம் ரூ. 20,000-இல் தொடங்கி அதிகபட்சம் ரூ. 30,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்பட்டது. தற்போது ஐபோன் 17 ப்ரோ மாடல் ரூ. 1,34,999 என்றும் ப்ரோ மேக்ஸ் மாடல் விலை ரூ. 1,49,900 விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அமெரிக்க சந்தையில் புதிய ஐபோன்களின் விலை 200 டாலர்கள் வரை அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த விலை உயர்வுக்கு உதிரிபாகங்கள் மற்றும் உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்து இருப்பதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.