

ஹெச்.எம்.எடி. குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 300 4ஜி பவர் பேங்க் மாடலை புதுப்பித்தள்ளது. முதற்கட்டமாக பிலிப்பைன்ஸ் சந்தையில் விற்பனைக்கு வரும் இந்த மொபைலின் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதிய நோக்கியா மொபைல் நம்பத்தகுந்த, நீண்ட நேர பேட்டரி பேக்கப் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களை குறிவைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. பிலிப்பைன்ஸ்-இல் இந்த மொபைல் விலை PHP 1,990 இந்திய மதிப்பில் ரூ. 3,110 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அம்சங்கள்:
புதிய நோக்கியா 300 4ஜி மொபைல் போன் 2.4 இன்ச் QVGA ஸ்கிரீன், IP65 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, ரக்கட் மற்றும் கைகளில் இருந்து நழுவாத வகையிலான வடிவமைப்பு கொண்டுள்ளது. இந்த மாடல் பழைய நோக்கியா 800 டஃப் அல்லது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹெச்.எம்.டி. டெரா எம் போன்ற மாடல்களின் மேம்பட்ட வெர்ஷனாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 3700mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. ஃபீச்சர் போன் மாடலில் இத்தகைய பேட்டரி வழங்கப்படுவது இதுவே முதல் முறை எனலாம். இத்துடன் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த மொபைல் கிட்டத்தட்ட 45 நாட்கள் வரை ஸ்டானட்-பை, 25 மணி நேர டாக்டைம் அல்லது மியூசிக், 23 மணி நேரத்திற்கு டார்ச் ஆன் செய்து வைக்கும் அளவுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
பவர் பேங்க்:
டார்ச் அளவை பொருத்தவரை வழக்கமான ஃபீச்சர் போன் மாடல்களில் இருப்பதைவிட இதில் ஐந்து மடங்கு வரை அளவில் பெரிய டார்ச் லைட் வழங்கப்பட்டுள்ளது. இவைதவிர இந்த மொபைலின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாக ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் வசதி உள்ளது.
இதை கொண்டு பக்கவாட்டில் உள்ள பட்டனை க்ளிக் செய்து இந்த மொபைல் போனை பவர் பேங்க்-ஆக பயன்படுத்த முடியும். இதை கொண்டு ஸ்மார்ட்போனிற்கு முழு சார்ஜ் ஏற்ற முடியாது என்றாலும், அளவில் சிறிய அக்சஸரீக்களை சார்ஜ் செய்து கொள்ளலாம். இத்துடன் இந்த மொபைலுடன் 4-இன்-1 யு.எஸ்.பி. கேபிள் மற்றும் ஏராளமான அடாப்டர்கள் வழங்கப்படுகின்றன.
இதர அம்சங்கள்:
புதிய நோக்கியா 300 4ஜி பவர் பேங்க் மாடல் அழைப்புகள், எஸ்.எம்.எஸ். மற்றும் எஃப்.எம். ரேடியோ வசதிகளை இயக்குவதற்கு ஏற்ற லைட் ஓ.எஸ். உடன் வருகிறது. இத்துடன் மைக்ரோ எஸ்.டி. கார்டு சப்போர்ட் உள்ளது. மேலும், 4ஜி வசதி, 0.3MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இந்த மொபைல் போன் பிளாக், கிரீன் மற்றும் கோல்டு என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. முதற்கட்டமாக இந்த மாடல் பிலிப்பைன்ஸ் நாட்டில் விற்பனைக்கு வருகிறது.