

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவில் தற்போது முதல் சுற்று ஆட்டம் நடந்து வருகிறது.
முன்னணி வீராங்கனைகள் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
நேற்று நடந்த 2வது சுற்று போட்டியில் நம்பர் 4 வீராங்கனையும், அமெரிக்காவைச் சேர்ந்த கோகோ காப், சக நாட்டு வீராங்கனையான கெய்லா டே உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், நம்பர் 2 வீராங்கனையான கஜகஸ்தானின் எலீனா ரிபாகினா, ஆஸ்திரேலியாவின் டாரியா கசட்கினா உடன் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய ரிபாகினா 6-3, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற போட்டிகளில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ஜப்பானின் நவோமி ஒசாகா, கிரீசின் மரியா சக்காரி, ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா, அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, அமெரிக்காவின் மேடிசன் கீஸ், உக்ரைனின் மர்டா கோஸ்ட்யூக் உள்ளிட்டோரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
நாளை நடைபெற உள்ள மூன்றாவது சுற்றில் கோகோ காப், கிரீசின் மரியா சக்காரி உடன் மோதுகிறார்.