சோயிப் மாலிக் 2-வது திருமணம்: மவுனம் கலைத்தது சானியா மிர்சா தரப்பு

சானியா மிர்சா- சோயிப் மாலிக் இடையே விவாகரத்து ஆனதாக செய்திகள் வெளியானது.சோயிப் மாலிக் நடிகை சானா ஜாவித்தை திருமணம் செய்ததன் மூலம் அது உண்மையாகியுள்ளது.
சோயிப் மாலிக் 2-வது திருமணம்: மவுனம் கலைத்தது சானியா மிர்சா தரப்பு
Published on

ஆறு முறை கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பட்டத்தை வென்றவரான இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, 2010-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு இஷான் என்ற மகன் உள்ளார்.

கடந்த சில வருடங்களாக இருவருக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் தனித்தனியே வாழ்ந்து வந்தனர். ஆனால், அவ்வப்போது இருவரும் சேர்ந்து காணப்பட்டனர்.

பின்னர் இருவருக்கும் இடையில் விவாகரத்தானதாக தகவல் வெளியானது. ஆனால், இருவரும் அதை உறுதிப்படுத்தாமல் இருந்தனர்.

இந்நிலையில், சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்தை திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்களை சோயிப் மாலிக் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதன்மூலம் விவாகரத்து பெற்றதாக வெளியான வதந்தி உண்மையாகிவிட்டது.

சோயிப் மாலிக்கின் 2-வது திருமணம் குறித்து தற்போது சானியா மிர்சா குழு மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் எழுதப்பட்டதாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சானியா மிர்சா பொதுவெளியில் இருந்து தனது தனிப்பட்ட வாழ்க்கையை ஒதுக்கியே வைத்திருப்பார். எனினும், இன்று தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விசயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சோயிப் மாலிக்- சானியா மிர்சா இடையே விவாகரத்தாகி சில மாதங்கள் ஆகிறது. சோயிப் மாலிக்கின் புதிய பயணத்திற்கு சானியா வாழ்த்து தெரிவிக்கிறார்.

அவருடைய வாழ்க்கையின் முக்கியமான இந்நேரத்தில், அவருடைய ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் சானியா மிர்சாவின் தனியுரிமையை மதிக்கும் வகையில் எந்தவிதமான ஊகங்களில் ஈடுபடுவதை தவிர்க்க கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com