

ரியல் மாட்ரிட் கிளப்பின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புளோரெண்டினோ பெரெஸ், கால்பந்து உலகையே அதிரவைக்கும் வகையில் ஒரு மெகா டிரான்ஸ்ஃபர் திட்டத்தை கையில் எடுத்துள்ளார்.
தங்கள் நகரத்தின் பரம எதிரியான அட்லெடிகோ மாட்ரிட் கிளப்பின் அர்ஜென்டினா ஃபார்வர்டு வீரர் ஜூலியன் ஆல்வரெஸை ஒப்பந்தம் செய்ய 150 மில்லியன் யூரோ (₹1,450 கோடி) ஆஃபரை தயார் செய்துள்ளார்.
உலகத்தரம் வாய்ந்த மற்றும் அதிக சந்தை மதிப்புள்ள சூப்பர் ஸ்டார்களை ஒப்பந்தம் செய்யும் ரியல் மாட்ரிட்டின் உத்தியே 'கலாடிகோ' எனப்படும்.
இதற்கு முன் ஜிடேன் (2001), ரொனால்டோ (2002), பெக்காம் (2003), மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ (2009) ஆகியோர் இந்த பாணியில்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
தற்போது அதே பாணியில் ஜூலியன் ஆல்வரெஸை கொண்டு வர பெரெஸ் திட்டமிட்டுள்ளார்.
இது நடந்தால், இதுவே ரியல் மாட்ரிட் வரலாற்றில் மிகப்பெரிய டிரான்ஸ்ஃபர் தொகையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலியன் ஆல்வரெஸை அவ்வளவு எளிதில் வேறு கிளப்பிற்கும் அனுப்ப முடியாது.
அட்லெடிகோ மாட்ரிட் கிளப் அவரது 'ரிலீஸ் கிளாஸ்' தொகையை €500 மில்லியனாக மிக உயரமாக நிர்ணயித்துள்ளது.
ரியல் மாட்ரிட் கொடுக்க நினைக்கும் €150 மில்லியன் தொகையானது, அவரது ரிலீஸ் கிளாஸ் விலையை விட மிகக் குறைவு என்பதால் அட்லெடிகோ கிளப் நேரடியாக பேச்சுவார்த்தைக்கு வந்தால் மட்டுமே இந்த டீல் நடக்கும்
இந்த ஆஃபர் குறித்து அட்லெடிகோ மாட்ரிட் கிளப் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ கருத்தும் கூறாமல் மௌனம் காத்து வருகிறது.
ஜூன் 2026 ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் தலைவராக வென்ற பெரெஸ், ரசிகர்களை உற்சாகப்படுத்தவும், தங்களின் நிதி பலத்தை உலகிற்கு காட்டுவதற்காக இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அட்லெடிகோ மாட்ரிக் கிளப்பிற்கு வீரர்களை விற்க வேண்டிய நிதி நெருக்கடி எதுவும் இல்லை.
மேலும், தங்கள் சிறந்த வீரரை எதிரி கிளப்பிற்கு அனுப்ப அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்பதால் ரியல் மாட்ரிக் பலவீனமான நிலையிலேயே உள்ளது.
தற்போதுவரை இரு கிளப்புகளுக்கும் இடையே அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் எதுவும் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.