

சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சக வீராங்கனையான உன்னதி ஹூடா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய பி.வி.சிந்து முதல் செட்டை 21-14 என வென்றார். இதற்கு பதிலடியாக உன்னதி ஹூடா 21-9 என 2வது செட்டை எளிதில் கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பி.வி.சிந்து 21-10 என வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னதாக, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி முதல் சுற்றில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், தேவிகா சிஹாக் ஆகியோர் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.