

2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்ற தமிழ் நாட்டை சேர்ந்த டிரிபில் ஜம்ப் வீரர் செல்வ பிரபு திருமாறன், இந்த சாதனை தனக்கு ஒரு பெருமைக்குரிய தருணம் என்றும், எதிர்காலத்தில் மேலும் பெரிய வெற்றிகளை அடைய தொடர்ந்து முயற்சிப்பதற்கான உந்துதல் என்றும் கூறி மகிழ்ச்சி தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை நடந்த ஆடவர் டிரிபில் ஜம்ப் போட்டியில் செல்வ பிரபு வெண்கல பதக்கத்தையும், சக வீரரான பிரவீன் சித்ரவேல் வெள்ளி பதக்கத்தையும் வென்ற அசத்தினர். இதனால், இந்தியா ஒரு மறக்க முடியாத இரட்டை மேடை வெற்றியை இந்தப் போட்டியில் பதிவு செய்ய முடிந்தது.
தனது சாதனையை நினைவுகூர்ந்த செல்வ பிரபு திருமாறன், தனது பயணம் முழுவதும் தனக்கு துணையாக நின்ற பயிற்சியாளர்கள், குடும்பத்தினர் மற்றும் குழுவினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
போட்டி முழுவதும் சீரான முன்னேற்றத்தை காட்டிய இந்திய வீரர் செல்வா, 16.52 மீட்டர் என்ற தனது சிறந்த தாண்டுதலுடன் வெண்கல பதக்கத்தை வென்றார்.
வெண்கல பதக்கத்தை வென்ற பிறகு ஏ.என்.ஐ-யிடம் பேசிய செல்வ பிரபு திருமாறன், "எனக்கும் என் பெற்றோருக்கும் இது மிகுந்த பெருமை அளிக்கிறது. இது ஆரம்பத்தில் இருந்தே அவர்களின் கனவாக இருந்தது. நான் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று அவர்கள் எப்போதும் விரும்பினார்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த பதக்கம் வலிமையாக மீண்டுவருவதற்கான உத்வேகம் அளித்திருக்கிறது.
என் கவனம் பதக்கத்தின் மீது இருந்தது. நான் என் செயல்திறனில் அதிக கவனம் செலுத்தினேன். இந்தியாவுக்காக ஒரு பதக்கத்தை பெறுவது சிறந்த விஷயம். எனக்கு ஆதரவளித்தவர்கள், என் பயிற்சியாளர்கள், பிசியோக்கள், சக வீரர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இந்த பதக்கத்தை நான் அர்ப்பணிக்கிறேன். அவர்கள் எப்போதும் என் முதுகெலும்பாக இருக்கிறார்கள்," என்றார்.
செல்வ பிரபு திருமாறன் தனது இரண்டாவது முயற்சியில் 16.17 மீட்டர் தாண்டி பதக்க நிலைகளுக்குள் நுழைந்தார், பின்னர் மூன்றாவது சுற்றில் அதை 16.43 மீட்டராக மேம்படுத்தினார். அதன்பிறகு, 16.52 மீட்டர் என்ற தனது சிறந்த முயற்சியை வெளிப்படுத்தி, பதக்க மேடையில் தனக்கான இடத்தை உறுதி செய்தார்.
விறுவிறுப்பான போட்டியில், பிரவீன் சித்ரவேல் 16.58 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றார். தொடக்க மூன்று சுற்றுகளுக்குப் பிறகு அவர் ஐந்தாவது இடத்தில் இருந்தார்; முதலில் 16.05 மீட்டர் தாண்டிய அவர், மூன்றாவது முயற்சியில் அதை 16.31 மீட்டராக மேம்படுத்தினார்.
பின்னர், தனது நான்காவது முயற்சியில் 16.58 மீட்டர் தாண்டி அசத்தினார். இதன் மூலம் சிறிது நேரம் முன்னிலை பெற்ற சித்ரவேல், இறுதியில் வெள்ளி பதக்கத்தை வென்றார்.
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் தடகள பிரிவு செயல்பாடு, இரட்டை பதக்க வெற்றியால் மேலும் சிறப்படைந்தது.